ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் 25 வயது தலித் பெண், மதகுரு உள்ளிட்டோரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் பல நாட்கள் அடைத்து வைக்கப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட மத குருவான சஞ்சய் சர்மா, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப சாமியார் ஆவார். அவரது குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்பவர். அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அந்த வீடியோவை பதிவு செய்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் சர்மா, வீட்டில் தனியாக இருந்த பெண்ணை முதல் முறையாக பாலியல் வன்கொடுமை செய்து அந்த பெண்ணை வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர், அவர் இந்த வீடியோவை வைத்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பணம் பறித்து, பின்னர் சிலருடன் சேர்ந்து மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாக அஜ்மீர் வடக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சாவி சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "குற்றம் சாட்டப்பட்டவர் அந்த பெண்ணுக்கு சில மயக்க மருந்துகளை கொடுத்துள்ளார். எத்தனை பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார்கள் என்பதையே அந்த பெண்ணால் சொல்ல முடியவில்லை" என்றார்.
பாதிக்கப்பட்டவருக்கு ஒரு குழந்தையும் இருப்பதாக கூறப்படுகிறது.
காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், "கடந்த சில நாட்களாக குற்றம் சாட்டப்பட்டவர்களால் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டேன். மேலும், பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானேன்.
கணவன் மற்றும் குழந்தையை கொன்று விடுவதாக அந்த பெண்ணை மதுகுரு மிரட்டினார். வீடியோவை வைரலாக்குவேன் என்றும் கூறியுள்ளார்
சம்பவம் நடைபெற்ற பிறகு, பாதிக்கப்பட்ட பெண் வீடு திரும்பாததால், அவரது கணவர் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். அதன் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் செப்டம்பர் 27 அன்று, பாதிக்கப்பட்ட பெண்ணை காவல் நிலையத்திற்கு வெளியே விட்டு சென்றுள்ளார். புகாரின் பேரில் அக்டோபர் 7ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.