7 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய விளையாட்டு போட்டிகள் தற்போது குஜராத்தில் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்டமான தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து போட்டிகள் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் முதல் சுற்று தொடங்கியது முதல் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இறுதியில் இவருக்கும் திலோத்தமா செனிற்கும் டை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்க ஷூட் ஆஃப் நடத்தப்பட்டது. அதில் இளவேனில் அதிக புள்ளிகள் பெற்றார். இதன்காரணமாக தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். திலோத்தமா சென் வெள்ளிப் பதக்கம் வென்றார். 3வது இடத்தை மெஹ்லி கோஷ் பிடித்து வெண்கலப் பத்தகம் வென்று அசத்தினார்.
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இளவேனில் வாலறிவன் சிறு வயது முதல் குஜராத் மாநிலத்தில் குடிபெயர்ந்துள்ளார். அவர் அந்த மாநிலம் சார்பாக தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். குஜராத் மாநிலம் சார்பாக பங்கேற்று மேலும் ஒரு தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.
முன்னதாக மகளிருக்கான 49 கிலோ பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. இதில் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு பங்கேற்றார். இவர் தொடக்கம் முதலே அசத்தினார். மொத்தமாக இந்தப் பிரிவில் க்ளின் அண்டு ஜெர்க் மற்றும் ஸ்நாட்ச் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து சானு 191 கிலோ எடையை தூக்கினார்.
இதன்மூலம் தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தினார். அவரைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பளுதூக்குதல் போட்டிகளில் பங்கேற்கும் சஞ்சிதா சானு 187 கிலோ எடையை தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார். இவர்கள் இருவரும் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மூன்றாவது இடத்தை ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்நேகா சோரன் 169 கிலோ எடையை தூக்கி பிடித்தார்.
இந்தப் போட்டியில் தங்கம் வென்ற பிறகு சானு, “இத்துடன் நான் ஓய்வு எடுக்க போவதில்லை 2024 பாரிஸ் ஓலிம்பிக் போட்டிகளில் வேகமாக வர உள்ளது. அதற்கான தகுதியை முதலில் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இந்தாண்டு நடைபெற்ற காமன்வெல்த் பளுத்தூக்குதல் போட்டியில் இவர் தங்கப்பதக்கம் வென்று இருந்தார்.