’பொன்னியின் செல்வன்’ படத்தின் நிகழ்ச்சிகள் தஞ்சாவூரில் நடத்தப்படாதது ஏன் என்பது குறித்து நடிகர் பார்த்திபன் பேசியிருக்கிறார். 


மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஒரு சிலருக்கு படம் பிடிக்கவில்லை என்றாலும் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு படம் பிடித்திருந்தது. இந்த நிலையில் படத்தை பிரோமோட் செய்யும் விதமாக நடிகர் பார்த்திபன் இன்று தஞ்சை பெரியகோயிலுக்கு சென்றிருந்தார்.


அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது,  “ நான் முதலில் இங்கு சாமி கும்பிட வந்திருக்கிறேன். படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. எல்லா தரப்பில் இருந்தும் நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. உலகமே படத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த தஞ்சை மண்ணில் வந்து பொன்னியின் செல்வன் படத்தை பார்ப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வாழ்கையில் சில நல்ல காரியங்கள் செய்திருக்கிறேன். அதில் ஒரு நல்ல காரியமாக இதைப்பார்க்கிறேன்." என்றார். 


அவரிடம் தஞ்சையில் ஏன் படம் தொடர்பான எந்த பிரோமோஷன் நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை என கேள்வி எழுப்பபட்டது? 


அந்தக் கேள்விக்கு பதிலளித்த பார்த்திபன், “ எல்லோருமே பான் இந்தியா நடிகர்கள். மணிரத்னம் பான் இந்தியா டைரக்டர். அவர்களுடைய சார்பாக நான் வந்திருக்கிறேன். இதுவே ஒரு கொண்டாட்டம்தான். நான் சின்ன  பழுவேட்டரையராக படத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய போர்ஷன் மிகவும் குறைவுதான். நான் திரையில் தோன்றியபோது கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியை கொடுத்தது. சொல்ல முடியாது.. நான் முந்தைய பிறவியில் சோழனாக கூட பிறந்திருக்கலாம். ” என்று பேசியிருக்கிறார். 


கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். 




இந்தப்படத்தின் பிரோமோஷனின் ஆரம்பமாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஆனால் டீசர் ரசிகர்களை  பெரிதாக கவரவில்லை. அதனைத்தொடர்ந்து  'பொன்னி நதி' பாடல் வெளியிடப்பட்டது.  இந்தப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சோழா சோழா பாடல் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.


 






இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். இந்த நிகழ்வில் படத்தில் நடித்த கலைஞர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இதர தமிழ் பிரபலங்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து படத்தை பிரோமோட் செய்யும் வகையில் டெல்லி, மும்பை, ஹைதராபாத் என பல இடங்களுக்கு சென்றனர். இந்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே படம் வெளியானது. ஒரு சிலருக்கு படம் பிடிக்கவில்லை என்றாலும், பெரும்பான்மையான ரசிகர்களுக்கு படம் பிடித்திருந்தது.