கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் சுற்று போட்டியில் எட்டு முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்ற ரோஜர் ஃபெடரர் நேற்று களமிறங்கினார். அவர் பிரான்ஸ் நாட்டு வீரர் அட்ரியன் மன்னாரியோவை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. 


முதல் செட்டை ஃபெடரர் 6-4 என்ற கணக்கில் வென்றார். இரண்டாவது செட்டில் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனால் இரண்டாவது செட் டை பிரேக்கர் முறைக்கு சென்றது. அதில் 7-6 என்ற கணக்கில் மன்னாரியோ வென்றார். பின்னர் மூன்றாவது செட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் 6-3 என்ற கணக்கில் வென்றார். இந்தச் சூழலில் அனுபவ வீரர் ரோஜர் ஃபெடரர் தன்னுடைய அனுபவமான ஆட்டத்தை பயன்படுத்தி 6-2 என்ற கணக்கில் நான்காவது செட்டை வென்றார். 




இதன் காரணமாக இரு வீரர்களும் தலா 2 செட்களை வென்று இருந்தனர். போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க 5ஆவது செட் நடக்க இருந்தது. எனினும் நான்காவது செட் ஆட்டத்தின் போது களத்தில் கீழே விழுந்த மன்னாரியோ போட்டியில் காயம் காரணமாக தொடர முடியாத சூழல் உருவானது. எனவே போட்டியின் வெற்றியாளராக ரோஜர் ஃபெடரர் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ரோஜர் ஃபெடரர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 


முதல் சுற்று ஆட்டத்திற்கு பிறகு ரோஜர் ஃபெடரர் மைதானத்தில் பேசினார். அப்போது, "நீங்கள் விம்பிள்டன் போட்டியை கடந்த ஆண்டு மிஸ் செய்தீர்களா?" என்பதை வர்ணனையாளர் சற்று கடினமான ஆங்கில தொனியில் கேட்டார். அதற்கு தனக்கு எதுவும் புரியவில்லை என்று ஃபெடரர் கூறினார். அவர் மீண்டும் அதே மாதிரி கேட்டார் அப்போதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றார். இதனைத் தொடர்ந்து அந்த நபர் தெளிவாக கடந்த ஆண்டு தொடர் நடக்கவில்லை அதை நீங்கள் மிஸ் செய்தீர்களா என்று கேட்டார். இதற்கு, "இப்போது தான் நீங்கள் கேட்டது புரிகிறது. என்னுடைய ஆங்கிலம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. அத்துடன் எனக்கு ஆங்கில சரியாக தெரியாது" எனக் கூறினார். ரோஜர் ஃபெடரரின் இந்த பதிலை மைதானத்தில் இருந்த பல ரசிகர்கள் மிகவும் வரவேற்றனர். அத்துடன் கை தட்டி ஆரவாரத்தையும் ஏற்படுத்தினர். 






இந்த நிகழ்வு விம்பிள்டன் தொடரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் இது தொடர்பாக கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். நாளை நடைபெற உள்ள இரண்டாவது சுற்று போட்டியில் ரோஜர் ஃபெடரர் பிரான்சு நாட்டின் ரிச்சர்ட் கேஸ்கட்டை எதிர்கொள்ள உள்ளார். 


மேலும் படிக்க:Wimbledon | காயம்.. உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள் ! முதல் சுற்றிலேயே கண்ணீருடன் வெளியேறிய செரீனா வில்லியம்ஸ்