சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்தது.


 


இதையடுத்து, மும்பை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், குயிண்டின் டி காக்கும் ஆட்டத்தை தொடங்கினர். அந்த அணியின் குயின்டின் டி காக் 2 ரன்களுக்கு சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான அதிரடியால் 36 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களுக்கு 56 ரன்களை குவித்து ஷகிப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 




 


ரோகித் சர்மா 32 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்து பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னும், குருணால் பாண்ட்யா 15 ரன்னும், பொல்லார்ட் 5 ரன்னும் மட்டுமே எடுத்தனர். இதர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னிலே வெளியேறினர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் எடுத்தது.


 


இதையடுத்து, கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ரானா, சுப்மன் கில் முதல் 72 ரன்கள் சேர்த்தனர். கில் 33 ரன்களில் ஆட்டமிழந்து சென்றதை அடுத்து, திரிபாதி 5, மோர்கன் 7, ஷகிப் ஹல் ஹடன் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த ரானாவும் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  




 


16ஆவது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் என்ற நிலையில் கொல்கத்தா இருந்தது. களத்தில் தினேஷ் கார்த்திக், ரசல் ஆகியோர் இருந்தனர். அவர்கள் அணியை பெற்றி பெற வைத்திருவார்கள் என ரசிகர்கள் நம்பினர்.




 


கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், போல்ட் அபாரமாக பந்துவீசி ரசல், கம்மின்ஸ் ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தினார். இறுதியில் கொல்கத்தா அணியால் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 10 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்ற மும்பை அணி, நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியையும் பதிவு செய்தது. 




சிறப்பாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை சாய்த்த மும்பை வீரர் ராகுல் சாஹர் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.