நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. இந்த அணி இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில் சென்னையில் இருந்தப் போட்டிகளை முடித்துவிட்டு நேற்று பெங்களூரு அணி மும்பைக்கு சென்றது. அப்போது விமானத்தில் ஆர்.சி.பி வீரர்களுடன் மிஸ்டர் நாக்ஸ் ஒரு நகைச்சுவையான கலந்துரையாடலை செய்தார். இந்த வீடியோவை பெங்களூரு அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

 

அதில், “முதலில் நாக்ஸ், நாம் சென்னை டூ மும்பை 90 நிமிடங்களில் சென்றுவிடுவோம். ஒருவேளை தாமதம் ஆனால் நமது கேப்டன் கோலிக்கு அபராதம் விதிக்கப்படும். தாமதத்திற்காக அபராதம் பெறுவது நமது கேப்டனுக்கு புதிதல்ல. மேலும் விமானத்தில் அவசர நிலை ஏற்பட்டால் ஏ.பி.டிவில்லியர்ஸை மட்டும் நம்பாமல் அனைவரும் தங்களது கடைமையை செய்ய வேண்டும். உங்களுடன் சேவைக்காக ஹர்ஷல் பட்டேல், மேக்ஸ்வெல் ஆகியோர் உள்ளனர்” எனக் கூறி நாக்ஸ் கலாய்த்தார். 

 

பின்னர் அவர் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் மைக் ஹேசன் மற்றும் கேப்டன் விராட் கோலியிடம் ஒரு கோரிக்கையையும் விடுத்தார். அதாவது, “நாம் தற்போது புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளோம். இது எப்போதும் நடக்காது. எனவே இது போதும் நாம் பெங்களூருக்கு திரும்புவோம்” என இருவரிடம் கோரிக்கை விடுத்தார். 

 

அதற்கு கேப்டன் கோலி, “இவனை முதலில் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடுங்கள்” என்று பதிலளித்தார். அதன்பின்னர் இவர் மற்ற வீரர்களுக்கும் தொல்லை கொடுத்தார். இதனைத் தொடர்ந்து ஆர்.சி.பி வீரர்கள் இவரை கழிப்பறையில் அடைத்து வைத்தனர். இந்த நகைச்சுவையான வீடியோவை பலர் லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர். 

 

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை பெங்களூரு அணி ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் 'இ சாலா கப் நமதே' என்ற முழக்கத்துடன் பெங்களூரு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் அவர்களை பெங்களூரு அணி ஏமாற்றிவிட்டாலும், அந்த அணியின் ரசிகர்கள் ஆதரவு அளிப்பதை நிறுத்துவதில்லை. இந்த தொடரின் தொடக்க முதலே ஆர்சிபி அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே இந்த முறை இதை சரியாக பயன்படுத்தி பெங்களூரு அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

பெங்களூரு அணி நாளை நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மும்பையில் நடைபெற உள்ளது. சென்னை அணியிடம் அடைந்த தோல்விக்கு பிறகு வலுவான பெங்களூரு அணியை ராஜஸ்தான் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.