இந்தியாவின் மிகப்பிரபலமான விளையாட்டு கிரிக்கெட் என நாம் எந்த சந்தேகமும் இன்றி கூறி விடலாம். மாநிலங்கள், மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள், சாதிகள், மதங்கள் என பல பிரிவுகளாக வாழும் இந்நாட்டில் கிரிக்கெட் போட்டிகளின் போது இந்தியர் என்ற உணர்வு ஒட்டுமொத்த மக்களிடமும் மேலோங்குகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் பல திறமையான கிரிக்கெட் வீரர்கள் இளம் வயதிலேயே தயாராகின்றனர். இடர்கள், புறக்கணிப்புகள், கஷ்டங்களை கடந்து அந்த நீல நிற ஜெர்சியை அணிந்து இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே இவர்கள் ஒவ்வொருவரின் குறிக்கோளாக இருக்கிறது.


அந்த வகையில், ஜம்மு காஷ்மீரிலும் கிரிக்கெட் பிரபலமான விளையாட்டாக விளங்கி வருகிறது. ஜம்மு காஷ்மீர் சென்றால் அங்குள்ள வீதிகளில் ஏராளமான சிறுவர்கள் பேட், பந்துகளுடன் கிரிக்கெட் விளையாடுவதை காண முடியும். ஜம்மு காஷ்மீரை ரத்த பூமியாக மட்டுமே ஊடகங்களில் பார்த்த நமக்கு இது புதுமையான செய்தியாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. இங்கும் பல வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடுவதை வாழ்நாள் லட்சியமாக கொண்டு தயாராகி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு அரசு சார்பில் போதிய உதவிகள் கிடைப்பதில்லை.



பயங்கரவாத தாக்குதல்கள், ராணுவத்தின் கடும் நடவடிக்கைகள், அரசின் கட்டுப்பாடுகள், அடிக்கடி அமல்படுத்தப்படும் ஊரடங்குகள், துண்டிக்கப்படும் இணையதளம், செல்போன்கள் சேவைகள் என  திடீர் கைதுகளால் பாதிக்கப்பட்டு பாதி சுதந்திரத்தை கூட அனுபவிக்க முடியாமல் தவிக்கும் காஷ்மீர் மக்கள் அடுத்தக்கட்டத்துக்கு முன்னேற அரசு போதிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.


இந்த நிலையில், ஜம்மு காஷ்மீருக்கான கிரிக்கெட் தூதராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஸ்ரீநகரில் நடைபெற்ற கிரிக்கெட் பயிற்சி முகாமில் பங்கேற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.



இதுகுறித்து பேசிய அவர், ”ஜம்மு காஷ்மீரில் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு போதிய பயிற்சியும் வழிகாட்டுதலும் கிடைப்பது இல்லை. தற்போது காஷ்மீரிலிருந்து அப்துல் சமத், ராஜிக் கான் போன்ற கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎலில் விளையாடத் தொடங்கி இருக்கின்றனர். பர்வேஸ் ரசூல் ஏற்கனவே இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். காஷ்மீரில் திறமைக்கு பஞ்சமில்லை.” என்றார்.


தொடர்ந்து பேசிய யூசுப், “ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் பயிற்சிக்கு மிகக்குறைவான வசதிகளே செய்து தரப்பட்டு உள்ளன. அதை சமாளித்துக்கொண்டே வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை நமது இந்திய ராணுவமும் தற்போது வழங்கி வருகிறது.” என்றார்.


இந்திய ராணுவ வீரர்களுடன் காஷ்மீரில் உள்ள குப்வாரா, ஹந்த்வாரா, பந்துபோரா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்ற யூசுப் பதான், அங்குள்ள சிறுவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார். “இங்கு கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் வேகமாக பந்துவீசுவதையும், மைதானத்தை தாண்டி சிக்சர் அடிப்பதையும், ரிஸ்க் எடுத்து பீல்டிங் செய்வதையும் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. கிரிக்கெட்டை அவர்கள் அதிகமாக நேசிக்கின்றனர்." என்றார்.



விளையாட்டு மன கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார். “விளையாட்டு வீரரின் கவனம் ஒருபோதும் சிதறாது. அனைத்துக்கும் விளையாட்டு மருந்தாக இருக்கிறது. இந்தியா முழுவதும் சிறுவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். அவர்களை திசைமாறாமல் விளையாட்டு பாதுகாக்கும்.” என்று நம்பிக்கை தெரிவித்தார்.


இந்தியாவுக்காக 57 ஒருநாள் மற்றும் 22 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள யூசுப் பதான், 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.