Minister Udhayanidhi - Vijay Amritraj: டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் இணைந்த விஜய் அமிர்தராஜிற்கான பாராட்டு விழாவில், தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம்:
அமெரிக்காவின் நியூபோர்ட், ரோட் தீவில் உள்ள ஹால், 1955 முதல் செயல்பட்டு வருகிறது. இது டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் பிற பங்களிப்பாளர்களை கவுரவிக்கிறது. இந்த ஹாலில் இடம்பெறுவது டென்னிஸ் வீரர்களுக்கு கிடைக்கும் பெரும் அங்கீகாரமாக கருதப்படுகிறது. அந்த வகையில், ஆடவர் இரட்டையர் அல்லது கலப்பு இரட்டையர் பிரிவில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், மற்றொரு முன்னாள் இந்திய டென்னிஸ் வீரரான விஜய் அமிர்தராஜ் ஆகியோர் சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக கடந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், இந்த அங்கீகாரத்தை பெற்ற முதல் ஆசிய வீரர்கள் என்ற பெருமையை பெற்றனர். அதோடு, ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற 28வது நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. முன்னதாக, இரண்டு கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்ற சீன வீராங்கனையான லீ நா, 2019ல் இந்த அங்கீகாரத்தை பெற்றார். அதாவது, சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற முதல் ஆசிய டென்னிஸ் பிரதிநிதி ஆனார்.
விஜய் அமிர்தராஜிற்கு பாராட்டு விழா:
இந்நிலையில், சென்னையை பூர்வீகமாக கொண்ட விஜய் அமிர்தராஜிற்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. சென்னையில் தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி, செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் டென்னிஸ் வீரர் ரமேஷ் கிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசியவர்கள், விஜய் அமிர்தராஜ் உடனான தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
உதயநிதி பெருமிதம்:
நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பாக அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இந்திய டென்னிஸ் வீரரும், இரண்டு முறை டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியாளருமான விஜய் அமிர்தராஜ், சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் இணைக்கப்பட்டதற்கான பாராட்டு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. லியாண்டர் பயஸுடன் இணைந்து இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்தைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். விஜய் அமிர்தராஜின் டென்னிஸ் மற்றும் சமூகத்தின் பங்களிப்புகள் வரலாற்றில் அழியாத முத்திரையை பதிக்கும். அவரது அசாதாரண சாதனைகளை கொண்டாடுவோம், அவருடைய பாரம்பரியம் சந்தேகத்திற்கு இடமின்றி வரும் தலைமுறைகளை ஊக்குவிக்கும்” என உதயநிதி பதிவிட்டுள்ளார்.