தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தாய்லாந்தில் ஆசிய பெண்கள் சாம்பியன்ஷிப் லேசர் பாம்மரப் படகு போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனையான தமிழகத்தைச் சேர்ந்த நேத்ரா குமணனைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (19.12.2022) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில், 09.12.2022 முதல் 15.12.2022 வரை தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பெண்கள் சாம்பியன்ஷிப் - 2022 லேசர் பாய்மரப்படகு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சென்னையை சார்ந்த வீராங்கனை நேத்ரா குமணனைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வில்வித்தை வீராங்கனை பவானிதேவி மற்றும் டென்னிஸ் வீரர் ராம்குமார் ராமநாதன் ஆகியோர் சந்தித்தனர்.
லேசர் பாய்மரப்படகு வீராங்கனை நேத்ரா குமணன், தேசிய அளவில் 11 பதக்கங்கள் வென்றுள்ளார். 2021 ல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் -2020-ல் விளையாட தேர்ச்சி பெற்றார். 2020 ல் அமெரிக்கா, மியாமியில் நடைபெற்ற உலக கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார். மேலும் இரண்டு முறை ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தில் (MIMS) பயனடைந்து வருகின்ற நேத்ரா குமணன் அவர்களுக்கு இதுவரையில் அரசு சார்பில் உயரிய ஊக்கத் தொகையாக ரூ. 15 இலட்சமும், டென்னிஸ் வீரர் ராம்குமார் ராமநாதன் அவர்களுக்கு ரூ.49 இலட்சமும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுகள் மட்டும்) வழங்கும் திட்டத்தில் (ELITE) பயனடைந்து வருகின்ற வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவிக்கு ரூ.1.98 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மருத்துவர். கா.ப. கார்த்திகேயன், இ.ஆ.ப., ஆகியோர் உடன் இருந்தனர்.