சென்னையில் இன்று நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 9வது ஆட்டத்தில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதின, இரண்டு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய ஹைதராபாத் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்வதற்காகவும், மும்பை அணி தனது வெற்றியை தொடர்வதற்காகவும் களமிறங்கின.


டாசில் வெற்றி பெற்று ஆட்டத்தை தொடங்கிய மும்பை அணியில் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் டி காக் மற்றும் இஷான் கிஷான் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டி காக் 40 ரன்களில் வெளியேறினாலும், கடைசியில் களமிறங்கிய பொல்லார்ட் 22 பந்துகளில்  1 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 35 ரன்களை குவித்து அணி கவுரவமான ஸ்கோர் எட்ட உதவினார். இதனால், மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை குவித்தது.




இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. டேவிட் வார்னரும், ஜானி பார்ஸ்டோவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.


அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஜானி பேர்ஸ்டோ 22 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 43 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மணிஷ் பாண்டேவும் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க கேப்டன் வார்னரும் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து ஹைதரபாத் அணி விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரியத்தொடங்கியது.


தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் மட்டும் 25 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் அடித்து 8வது விக்கெட்டாக வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 19.4 ஓவர்களில் ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.




மும்பை அணியில் ராகுல் சாஹர் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.