15வது ஹாக்கி உலகக்கோப்பைத் தொடர் ஒடிசாவில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, ஒடிசாவின் முக்கிய நகரமான கட்டாக்கில் இன்று உலகக்கோப்பை ஹாக்கித் தொடருக்கான தொடக்க விழா நடைபெற்றது.




கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் இன்று உலகக்கோப்பை ஹாக்கித் தொடரை ஒடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்பட பல அமைச்சர்களும் பங்கேற்றனர். இன்று நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியை காண்பதற்காக சுமார் 50 ஆயிரம் ரசிகர்கள் மைதானம் முழுவதும் குவிந்திருந்தனர்.


மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட உலகக்கோப்பை ஹாக்கித் தொடர் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்திலும், ரோர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா மைதானத்திலும் நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட தொடக்க விழாவில் பாலிவுட் பிரபலங்களான ரன்வீர்சிங் மற்றும் திஷா பதானி கலைஞர்களாக பங்கேற்று அசத்தினார்.




பிரபல இசையமைப்பாளர் ப்ரிதம் ஹாக்கி சிறப்பு இசை ஆந்தம் உருவாக்கியிருந்தார். இதில் பிரபல பாடகர்களான பென்னி தயால், நீதி மோகன் ஆகியோர் பாடியிருந்தனர். 15வது உலகக்கோப்பை ஹாக்கித் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி பலமிகுந்த ஸ்பெயின் அணியை நாளை மறுநாள் சந்திக்க உள்ளது.


குரூப் ஏ – அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா


குரூப் பி – பெல்ஜியம், ஜெர்மனி, ஜப்பான், கொரியா


குரூப் சி – சிலி, மலேசியா, நெதர்லாந்து, நியூசிலாந்து


குரூப் டி – இங்கிலாந்து, இந்தியா, ஸ்பெயின், வேல்ஸ்


ஆகிய அணிகள் மேற்கண்ட பிரிவுகளில் அணிகள் பங்கேற்கின்றது.


 


நாளை மறுநாள் தொடங்கும் இந்த உலகக்கோப்பை ஹாக்கித் தொடர் வரும் ஜனவரி 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி உள்பட மொத்தம் 44 போட்டிகள் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி வரும் ஜனவரி 29-ந் தேதி புவனேஸ்வரில் நடைபெற உள்ளது.