மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் கூடைப்பந்து, கைப்பந்து, கபாடி மற்றும் தடகளப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இங்கு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மயிலாடுதுறை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ மாணவிகள் இங்கு விடுதியில் தங்கி அரசு பள்ளிகளில் பயின்று விளையாட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  




இந்நிலையில் மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் நடப்பாண்டுக்கான வீரர்கள் கடந்த 22 -ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இதில் கபாடி போட்டிக்கு மட்டும் வீரர்கள் தேர்வு குறித்து அதில் வெளியிடப்படவில்லை.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கபாடி பயிற்சி அளிப்பதற்கான பயிற்சியாளர் இல்லாததால் கபாடி பயிற்சிக்கு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படவில்லை என கூறப்பட்டது.  


Asia Cup Records: ஆசியக்கோப்பை வரலாற்றில் பெயரை பொறித்துள்ள வீரர்கள்… அசரவைக்கும் 10 சாதனைகள்!




இந்நிலையில், கபாடி விளையாட்டு ஆர்வலர்கள் , சமூக செயற்பாட்டாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்பின் காரணமாக இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் நடப்பு 2023 - 24-ம் ஆண்டிற்கான கபாடி வீரர்கள் சாய் பயிற்சி மையத்தில் தேர்வு செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து செப்டம்பர் 6-ம் தேதி மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் ஆண், பெண் இருபாலருக்குமான கபாடி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த அறிவிப்பு கபாடி விளையாட்டு வீரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.