அர்ஜெண்டீனாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் டீகோ மாரடோனா கடந்த ஆண்டு நவம்பர் 25-ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், மாரடோனா இறந்தபோது இதயம் இன்றி அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாக அர்ஜெண்டீனா மருத்துவர், பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்திருப்பது கால்பந்து ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.


கேஸ்ட்ரோ என்ற அந்த மருத்துவர் அவரது புத்தக வெளியீட்டு விழாவின்போது பேசினார். அப்போது, “கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவின் இறப்பு அவரது ரசிகர்களை பாதித்திருக்கும். இந்நிலையில், அவரது உடல் தகனம் செய்யும் முன், அவரது இருதயங்கள் நீக்கப்பட்டு அதன் பின்பே உடல் தகனம் செய்யப்பட்டது. இல்லையெனில், அவரது ரசிகர்கள் உடல் தகனம் செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு வந்து அவரது இருதயத்தை தோண்டி எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. அவரை உயிராய் நினைக்கும் ரசிகர்கள் அதிகம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மாரடோனாவின் இருதயம் அரை கிலோ எடை கொண்டதாக இருந்ததாகவும், இது சாதாரண ஆணின் இருதய எடையைவிட இரட்டிப்பானது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.



கால்பந்தின்  ஜாம்பவான் என உலக பிரபலம் வாய்ந்த மாரடோனாவின் புகழை உலகம் அறிந்ததை போலவே, அவரது வாழ்க்கையிலும், வாழ்க்கைக்கு பிறகும் இருக்கும் சர்ச்சைகளும் மிக அதிகமே. அவரது ஓராண்டு நினைவஞ்சலி வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு, மாரடோனா மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் க்யூபாவைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர். இது கால்பந்து வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


அர்ஜெண்டீனா நாட்டில் உள்ள புயனெஸ் ஏர்ஸ் நகரத்தில் உள்ள நீதிமன்றத்தில் க்யூபாவைச் சேர்ந்த மேவிஸ் எல்வரேஸ் என்ற பெண் மாரடோனா மீது புகார் அளித்திருக்கிறார். அதில், தன்னுடைய 16வது வயதில் மாரடோனாவுடன் பழகியதாகவும், அப்போது அவர் கட்டாய பாலுறவுக்கு வலியுறுத்தியதாகவும், போதைப் பொருளுக்கு அடிமையாக்கியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.


இது தொடர்பாக நீதிமன்றத்தில் இப்போது வழக்கு தொடர்ந்திருக்கும் மேவீஸ், இனி இந்த சம்பவம் பற்றி பேசப்போவதில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். மாரடோனா மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருக்கும் அவரது குடும்பத்தினர், மேவீஸ் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். இறந்தும் செக்ஸ் புகார் குற்றச்சாட்டில் மாரடோனாவின் பெயர் அடிப்படுவது கால்பந்து வட்டாரத்தில் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. எனினும், இது குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்த பிறகே இச்சம்பவத்தை ஒட்டிய உண்மைகள் வெளிவரும் என தெரிகிறது. 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண