Malaysia vs Japan Hockey Highlights:  மலேசியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் தொடக்கம் முதல் மலேசியா அணி ஆதிக்கம் செலுத்தியது. 


2023ஆம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி கடந்த 3ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சௌத் கொரியா, சீனா, ஜப்பான் என மொத்தம் 6 அணிகள் களமிறங்கியுள்ளது. 2011ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் கடந்த ஆண்டு வரை மொத்தம் 6 சீசன்கள் நடைபெற்றுள்ளது.


இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தனித்தனியே இரண்டு முறை கோப்பையையும், ஒருமுறை இணைந்தும் கோப்பையை வென்றுள்ளது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கணக்கில் தலா மூன்று கோப்பைகள் உள்ளது. இது இல்லாமல், கடந்த முறை அதாவது, 2021ஆம் ஆண்டு சௌத் கொரியா அணி கோப்பையை வென்றது. இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது. தொடரை தமிழ்நாடு மாநில அரசு நடத்துகிறது.


கடந்த 6 சீசன்களிலும் தொடரை நடத்திய நாடு கோப்பையை வென்றதாக வரலாறு இல்லை. அதனை இம்முறை பலமான இந்திய அணி முறியடிக்குமா என்பதை காத்திருந்திதான் பார்க்கவேண்டும். கடந்த 3ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டித் தொடர் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தம் இரண்டு அணிகளாக இந்தியாவும் மலேசியாவும் உள்ளன. அதேபோல், இந்த தொடரில் மிகவும் மோசமான நிலையில் உள்ள அணி என்றால் அது சீனா தான். அந்த இன்னும் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல், ஒரு போட்டியில் டிராவும், இரண்டு போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது. 


இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 7ஆம் தேதி) ஜப்பான் மற்றும் மலேசியா அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டி தொடங்கும் போதே பெரும்பாலானோர் மலேசிய அணிதான் வெற்றி பெறும் என கணித்தனர். அதேபோல்தான் போட்டி தொடங்கியது முதல் மலேசியா அணியின் ஆதிக்கம் காணப்பட்டது. இதனால் போட்டியின் 12வது நிமிடத்தில் மலேசிய அணி தனது முதல் கோலை அடித்தது.


அதன் பின்னர் போட்டியின் இரண்டாவது சுற்றில் மலேசியா அணியின் வீரர் அஸ்கான் அசனுக்கு மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டது. போட்டியின் மூன்றாவது சுற்றில் மலேசிய அணி மீண்டும் ஒரு கோல் அடித்தது. மலேசியா அணிக்கான இரண்டாவது கோலை அஸ்ரன் ஹம்சனி அடித்து அசத்தினார். 


போட்டியின் நான்காவது சுற்றில் இரு அணிகளும் 59வது நிமிடத்தில் மாறி மாறி ஒரு கோல் அடித்தனர். ஆனாலும் போட்டி முடிவில் பெரிய தாக்கத்தை இந்த கோல்கள் ஏற்படுத்தவில்லை.  தொடக்கம் முதல் மலேசியா அணி சிறப்பாக விளையாடியது. நான்கு சுற்றுகள் முடிவில் ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியை  மலேசியா அணி 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் மூன்று வெற்றி 9 புள்ளிகளுடன் மலேசியா அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.