தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தவிரட வேண்டும் எனக் கோடிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 


ஆடியோ விவகாரம்:


தமிழ்நாடு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஆடியோ ஒன்றை டிவிட்டர் பக்கத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். அந்த உரையாடலில் உதயநிதியும் சபரீசனும் ரூ.30 கோடிக்கும் அதிகமாக பணம் சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆடியோ போலியானது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருந்தார். 


இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பிரனேஷ் ராஜமாணிக்கம் என்பவர் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. தலையிட வேண்டும் என்று மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "30 ஆயிரம் கோடி ரூபாய் தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் குறித்து உள்ளூர் போலீஸார் விசாரிக்க உத்தரவிடக் கூடாது." என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  


தள்ளுபடி:


இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, "அரசியல் காரணங்களுக்காக உச்ச நீதிமன்றத்தை நாடக் கூடாது. குற்றவியல் நடைமுறை சட்ட விதிகளின்படி போதுமான நடவடிக்கை எடுக்க, இந்திய அரசியலமைப்பு சட்டம் வழிவகை செய்திருக்கிறது. அப்படியிருக்கும்போது, அரசியலுக்கான தளமாக நீதிமன்றத்தை பயன்படுத்தக் கூடாது" எனக் கூறி, சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.