மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், பிரணாய், சாய் பிரணீத், கஷ்யப் உள்ளிட்ட முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், கஷ்யப், சாய் பிரணீத் உள்ளிட்டவர்கள் விளையாடினர்.
இதில் பி.வி.சிந்து முதல் சுற்றுப் போட்டியில் சீன வீராங்கனை ஹூ பிங் ஜியோவை எதிர்த்து விளையாடினார். சீன வீராங்கனை பிங் உலக தரவரிசையில் 9வது இடத்தில் உள்ளார். இதனால் இந்தப் போட்டி மிகவும் கடினமான ஒன்றாக பார்க்கப்பட்டது. இந்தப் போட்டியில் முதல் கேமை பி.வி.சிந்து 21-15 என்ற கணக்கில் வென்றார்.இரண்டாவது கேமை சீன வீராங்கனை பிங் 21-17 என்ற கணக்கில் வென்றார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3வது கேமில் பி.வி.சிந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 21-13 என்ற கணக்கில் எளிதாக 3வது கேமை வென்றார். அத்துடன் 21-15,17-21,21-13 என்ற கணக்கில் போட்டியை வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மற்றொரு முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் பங்கேற்றார். இவர் உலக தரவரிசையில் 20வது இடத்திலுள்ள கிம் இயூனை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் கேமை சாய்னா நேவால் 21-16 என்ற கணக்கில் வென்றார். எனினும் அடுத்த இரண்டு கேம்களையும் சாய்னா நேவால் இழந்தார். இதனால் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கஷ்யப் உலக தரவரிசையில் 34ஆம் இடத்திலுள்ள டாமி சுகியார்டோவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் கேமை கஷ்யப் 16-21 என்ற கணக்கில் இழந்தார். எனினும் அதன்பின்னர் அவர் சுதாரித்து கொண்டு ஆடினார். அடுத்த இரண்டு கேம்களையும் 21-16,21-16 என்ற கணக்கில் வென்று அசத்தினார். அத்துடன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் பிரணாய் உலக தரவரிசையில் 39வது இடத்திலுள்ள பிரைஸ் லெவர்டெஸை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் இந்திய வீரர் பிரணாய் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் முதல் கேமை 21-19 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் இரண்டாவது கேமை 21-14 என்ற கணக்கில் வென்று அசத்தினார். இவர் 21-19,21-14 என்ற கணக்கில் போட்டியை வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்