2014ல் வெளியான கார்த்திகேயா படத்தின் தொடர்ச்சி தான், கார்த்திகேயா 2. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பின் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது. இது ஒரு சுத்தமான தெலுங்குப்படம். வழக்கம் போல, இந்திய அளவிலான வெளியீட்டிற்காக தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மொழி பெயர்த்துள்ளனர். 


ஆகஸ்ட் 13 ம் தேதி தெலுங்கில் வெளியான இத்திரைப்படம், நேற்று ஜீ-5 ஓடிடி தளத்தில் பல்வேறு மொழிகளுடன் வெளியாகியிருக்கிறது. கலியுகம் வரும் போது தேசத்தின் நிலை மாறும், இப்போது இருக்கும் அனைத்தும் தலைகீழாக மாறும், அப்போது மக்களை காக்க ஒருவன் வருவான், அவனை அடையாளம் கண்டு இதை அவனிடம் கொடு என, கிருஷ்ண பகவான் தனது கால் சிலம்பை அந்தகனிடம் தருகிறார். 






யுகங்களை கடந்து அது சேர வேண்டும் என்பதால், அதை ஓரிடத்தில் மறைத்து வைக்கும் அந்தகன், அதை எடுக்க இரு கண்டுபிடிப்புகளை அடுத்தே நெருங்க முடியும் படி, ஒரு செட்டப் செய்து வைக்கிறார். இது பற்றிய வெளிநாட்டு குறிப்பு ஒன்று மற்றொரு நாட்டில் இருக்கிறது. அதை எடுக்கும் ஆய்வாளர் ஒருவர், அதை உரியவனிடம் சேர்க்க முயற்சிக்கிறார். 


இதற்கிடையில் மற்றொரு செல்வந்தரான ஆய்வாளர் ஒருவர், நோய் பரப்பி, அதற்கு உரிய மருந்தை தான் மட்டும் வழங்கி உலகளாவிய செல்வந்தராக மாற திட்டமிடுகிறார். கிருஷ்ண பகவான் கொடுத்த அந்த சிலம்பு கிடைத்தால், அதிலுள்ள குறிப்பு மூலம் எந்த நோயையும் குணப்படுத்த முடியும். எனவே அந்த சிலம்பை தேடும் நவயுக டாக்டராக கார்த்திகேயா. அவருக்கு உதவியும் நல்உள்ளம் படைத்த பேராசிரியரின் பேத்தி.






தடைகளை தாண்டி சிலம்பத்தை எடுத்தாரா கார்த்திகேயா, நோய் பரவியதா? பரவிய நோய் கட்டுப்படுத்தப்பட்டதா? கிருஷ்ண பகவான் அஸ்திரம் என்ன ஆனது? இது தான் கதை. துவாரகையில் தொடங்கி பின்னர் மதுரா சென்று, அதன் பின் காஷ்மீர் சென்று... என்று கதை நகர்ந்து கொண்டே இருக்கிறது. இடையிடையே கார்ட்டூர் ப்ளாஷ்பேக்குகள் வேறு.


கே.ஜி.எப். மாதிரியான பில்டப், காட்சிக்கு காட்சிக்கு இடம் பெற்றிருக்கிறது. ஹீரோ ஒரு அவதாரமா? அல்லது அவதாரத்தின் ஆணைக்கு ஏற்ற நபரா? என்பது தெரியவில்லை. ஆனால், அவரோடு மர்மங்கள் தொடர்ந்து வருகின்றன. அறிவியலை மட்டுமே நம்பும் கார்த்திகேயா, அதை கடந்த ஒரு சக்தி இருக்கிறது என்பதை அறியாமலேயே முக்கால் வாசி படம் வரை பயணிக்கிறார். 


பின்னணியும், காட்சியும் இருந்தால் போதும் என அவற்றின் மீது பாரத்தை போட்டு படத்தை நகர்த்தியிருக்கிறார்கள். அதே நேரத்தில், சின்ன சின்ன சஸ்பென்ஸை பெரிய சஸ்பென்ஸ் போல நகர்த்தியிருப்து கொஞ்சம் ஃபோர் அடிக்கிறது. திடீர் திடீர் என ரவுடிகள் வருவது, திடீர் திடீர் என காட்சிகள் நகர்வது என பல இடங்களில் தொய்வு தெரிகிறது. 


கார்த்திகேயாவாக நிகில் சித்தார்த்தா, அவருக்கு உதவுபவராக அனுபமா, கவுரவ தோற்றத்தில் அனுபவ் கேர், வில்லன் ஆய்வாளராக ஆதித்யா என நிறைய கதாபாத்திரங்கள். போதாக்குறைக்கு காமெடியை திணிக்க வேண்டும் என்பதற்காக சிலர் சேர்க்கப்பட்டுள்ளனர். கால பைரவ் இசையும், சந்து முன்டேட்டி இயக்கமும், கார்த்திக் கட்டம்னேனியின் ஒளிப்பதிவும் போதுமானதாக உள்ளது. 


ஆன்மிகமா, த்ரில்லரா, பயண அனுபவமா.. என தெரியாமல் பணிக்கும் இந்த படம், ஓடிடியில் அமர்ந்து பார்க்க ஏற்றதே; இருந்தாலும் அது விரும்புவோரின் மனநிலையை பொருத்தது.