கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான மெஸ்ஸி தனது கண்ணீரைத் துடைக்க பயன்படுத்திய டிஷ்யூ பேப்பர், 1 மில்லியன் டாலர் மதிப்பிற்கு ஏலம் விடப்பட்ட சம்பவம்தான் இன்றைய வைரல் செய்தி. 


கடந்த 2004 ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி விளையாடி வந்தார் . பார்சிலோனாவுக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் மெஸ்ஸி உள்ளார். இந்நிலையில், பார்சிலோனா அணியுடனான அவரது ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், அந்த அணியில் இருந்து விடைப்பெற்று பாரீஸ் செயிண்ட் ஜெர்மெயின் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 


அதனை தொடர்ந்து, பார்சிலோனா அணியில் இருந்து விடைப்பெறும் முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மிகவும் மன வருத்தத்துடன் இருந்த மெஸ்ஸி கண் கலங்கினார். அப்போது, "இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. எனக்கு தற்போது என்ன சொல்ல வேண்டும் என்றே தெரியவில்லை. இந்த அணிக்கு என்னுடைய முதல் நாளில் இருந்து தற்போது வரை என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்தேன். இப்படி ஒரு நாள் வரும் என்று நான்  எண்ணவில்லை” என வருத்தத்துடன் தெரிவித்தப்படி டிஷ்யூ பேப்பர் பயன்படுத்தி கண்ணீரைத் துடைத்து கொண்டார். 






இந்நிலையில், அவர் பயன்படுத்திய டிஷ்யூ பேப்பர் 1 மில்லியன் டாலர் மதிப்பில் ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜெண்டீனாவைச் சேர்ந்த பிரபல இணையதளத்தில், இந்த ஏலத்திற்கான விளம்பரம் வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி,  அந்த டிஷ்யூ பேப்பரில் மெஸ்ஸியின் டி.என்.ஏ பதிவாகி உள்ளதால் அதை வைத்து க்ளோனிங் முறைப்படி மெஸ்ஸியின் திறமைகள் கொண்ட இன்னொருவரை உருவாக்க முடியும் எனவும் பகிரங்கமாக பேசப்படுகின்றது. எனினும், டிஷ்யூ பேப்பர் ஏலம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதுமட்டுமின்றி, அடையாளம் தெரியாத நபர் அந்த டிஷ்யூ பேப்பரை எடுத்துச் சென்றதாகவும், இப்போது அந்த டிஷ்யூ யாரிடம் உள்ளது என்பதன் தகவல்களும் இல்லை. ஆனால், ஒரு வேளை உண்மையாகவே மெஸ்ஸியின் டிஷ்யூ ஏலத்திற்கு விடப்பட்டால், கோடி கணக்கில் காசு கொடுத்து வாங்க ரசிகர்கள் உள்ளனர் என்பது நிதர்சனம். 






முன்னதாக, பி.எஸ்.ஜி அணியில் விளையாடுவதற்காக மெஸ்ஸிக்கு ஆண்டிற்கு 35 மில்லியன் யூரோ ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக மெஸ்ஸியின் வழக்கறிஞர்கள் மற்றும் மேலாளர்கள் மத்தியில் பேச்சுவார்த்தைக்கான உடன்படிக்கை ஏற்படுத்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் தற்போது இரண்டு வருடங்களுக்கு போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் 2024ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட வாய்ப்பும் உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.