கோபா அமெரிக்க கால்பந்து கோப்பையை வென்ற மகிழ்ச்சியை, மைதானத்தில் இருந்து வீடியோ கால் மூலம் தனது மனைவியிடம் பகிர்ந்து கொண்டார் அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸி. அப்போது, தனது பதக்கத்தை சந்தோஷத்துடன் மனைவிக்கு காண்பித்து மகிழ்ந்தார்.
அமெரிக்காவில் மிகவும் முக்கியமான கால்பந்து தொடர் என்றால் அது கோபா அமெரிக்க கால்பந்து தொடர்தான். இந்தாண்டு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரேசில் நாடுகள் மோதின. அமெரிக்க கண்டத்தின் இரு பெரும் கால்பந்து அணிகள் மோதியதால் இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. அத்துடன் மெஸ்ஸி மற்றும் நெய்மார் என இரண்டு நட்சத்திர வீரர்களும் ஒரே போட்டியில் களமிறங்கியதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தனர்.
இந்தப் போட்டியின் முதல் பாதியில் 22ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் எஞ்சல் டி மரியா, ரோட்ரிகோ கடத்தி தந்த பந்தை கோலாக மாற்றினார். இதன் காரணமாக அர்ஜென்டினா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின்னர் முதல் பாதியில் இரு அணிகள் வீரர் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
அதேபோல் இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் தீவிரமாக முயற்சி செய்தனர். குறிப்பாக ஆட்டத்தின் கடைசி இரண்டு நிமிடங்கள் எஞ்சி இருந்த போது மெஸ்ஸிக்கு அருமையான வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஆனால் அதை கோலாக மாற்ற மெஸ்ஸி தவறினார். இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரேசில் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.
அர்ஜெண்டினாவின் வெற்றியை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி வருகிறது. அந்த அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது மனைவி அன்டோனெல்லா ரோக்குஸோவை செல்போனில் வீடியோ கால் மூலம் அழைத்து கோப்பையை வென்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவர் பெருமையுடன் தனது பதக்கத்தை அவருக்கு காண்பித்து கொண்டிருக்கிறார்.
வீடியோவில், அவருடைய மனைவி சிரித்துக் கொண்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெஸ்ஸியின் மனைவி, மூன்று குழந்தைகள் கொண்டாடும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
இந்தத் தொடரில் 4 கோல்கள் அடித்த மெஸ்ஸி தொடரின் நாயகனாக அறிவிக்கப்பட்டார். அத்துடன், கோல்டன் பூட் விருதையும் பெற்றார்.
Lionel Messi | மெஸ்ஸியும் சர்வதேச கோப்பையும் : நிறைவேறிய நீண்ட நாள் கனவு !