கோப்பையை வென்ற மெஸ்ஸி:


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கத்தாரில் பரபரப்பாக நடைபெற்ற கால்பந்தாட்ட உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்சை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட மெஸ்ஸி தனது கடைசி உலகக்கோப்பை தொடரிலாவது, கோப்பையை கைப்பற்றுவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விறுவிறுப்பான போட்டியில் சிறப்பான பங்களிப்பு அளித்து கோப்பையை கைப்பற்றினார் மெஸ்ஸி. மைதானத்தில் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோரும், தொலைக்காட்சி மற்றும் இணையம் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களும் இந்த போட்டியை கண்டுகளித்தனர்.


1000 ரூபாய் நோட்டில் மெஸ்ஸி புகைப்படம்:


இந்தநிலையில், ஃபிபா உலகக் கோப்பையை வென்று கொடுத்த மெஸ்ஸியை கௌரவப்படுத்தும் விதமாக அர்ஜென்டினா குடியரசின் மத்திய வங்கி தங்கள் 1,000 ரூபாய் நோட்டில் லியோனல் மெஸ்ஸியின் படத்தை வைக்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 






டிசம்பர் 18 ம் தேதி கத்தார் FIFA உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியில், பெனால்டி ஷூட் அவுட்டில் மெஸ்ஸி தலைமையிலான அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வென்றதைக் குறிக்கும் வகையில் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தனியார் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. 


கத்தாரில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு முன்னதாகவே மத்திய வங்கி அதிகாரிகள் இந்த செயல்பாடு குறித்து யோசனைகளைச் செய்யத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், மெஸ்ஸியை ரூபாய் நோட்டில் வைப்பது பற்றிய பரிசீலிப்பு "கேலியாக" செய்யப்பட்டது என்றும் அறிக்கை கூறுகிறது.


மரடோனாவின் கையொப்பம்: 


முன்னதாக,  அர்ஜென்டினா செனட்டர் நார்மா துராங்கோ ஒருமுறை புகழ்பெற்ற கால்பந்து வீரர் டியாகோ மரடோனாவின் படத்தை நவம்பர் 2020 ம் ஆண்டு அவர் இறந்த பிறகு 1000 பெசோ நோட்டில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதில், 1986 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக வீரரின் "ஹேண்ட் ஆஃப் காட்" கோலைக் குறிப்பிட வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். 


மரடோனாவின் கையொப்பம் 1980-களில் மரியாதை செலுத்தும் வகையில் 500 பெசோவில் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.