ஏப்ரல் மாதம் தொடங்கிவிட்டாலே இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் குதூகலம் அடைவார்கள். காரணம் மார்ச் மாதத்தின் இறுதியில் இருந்து மே மாதம் வரை ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஒவ்வொரு நாளும் பிடித்த வீரர்களின் சிக்சர் மழையும் பேட்டிங் ஸ்டைலும் தான் ஐகானிக்காக பேசப்படுவது உண்டு. அந்த அளவிற்கு ஐபிஎல் சீசன் போட்டிகள் மக்களிடையே புத்துணர்ச்சியை அளித்து வருகிறது. எந்த அளவிற்கு பாராட்டை பெறுகிறதோ அதேபோன்று பல மோசமான சம்பவங்களும் கரும்புள்ளியாக இருக்கிறது. மறக்க முடியாத வடுவாகவே தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கரும்புள்ளி
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க நினைக்குற நிகழ்வில் ஒன்றான ஸ்லாப்கேட் சம்பவம் நடந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில், ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்த வீடியோ வெளியாகி மீண்டும் புயலை கிளப்பியுள்ளது. 17 ஆண்டுக்கு பின் இந்த வீடியோவை ஐபிஎல் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சீசனில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது மிக மோசமான நிகழ்வு அரங்கேறியது.
ஸ்ரீசாந்தை அறைந்த ஹர்பஜன் சிங்
மும்பை அணியின் கேப்டனாக இருந்த ஹர்பஜன் சிங், பஞ்சாப் அணி வீரர் ஸ்ரீசாந்தைக் கன்னத்தில் அறைந்தார். களத்திலேயே ஸ்ரீசாந்த் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் அப்போது ஒளிபரப்பானாலும், ஹர்பஜன் அறைந்ததற்கான வீடியோ ஆதாரம் வெளியாகவில்லை. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்குடன் ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய லலித் மோடி, இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய லலித் மோடி, போட்டி முடிந்துவிட்டது. கேமராக்கள் அனைத்தும் அணைக்கப்பட்டுவிட்டன. இது எனது பாதுகாப்பு கேமராக்களில் ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. அதில் ஹர்பஜனுக்கும் ஸ்ரீசாந்துக்கும் இடையேயான அந்தச் சம்பவம் பதிவானது. இத்தனை ஆண்டுகளாக நான் இதை வெளியிடவில்லை. இப்போது 18 ஆண்டுகள் ஆகிவிட்டன என குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் இருந்து நீக்கி விடுங்கள்
சமீபத்தில் கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் உரையாடிய ஹர்பஜன் சிங், என் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து நீக்க நினைத்தால் ஸ்ரீசாந்த் உடனான சம்பவத்தை தான். அதற்காக மிகவும் வருத்தப்பட்டு, பல முறை மன்னிப்பு கேட்டிருக்கேன். ஸ்ரீசாந்த் மகள் என்னிடம் கேட்ட கேள்விகள் மனதை உலுக்கிவிட்டது என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.