எல்லாவற்றையும் அரசே செய்ய முடியாது; மக்களும் கைகோக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைப்பதற்காக பல்வேறு முன்னோடித் திட்டங்களை பள்ளிக் கல்வித் துறை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளிகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக ‘நம்ம ஸ்கூல்’ திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பொதுமக்களும் அரசும் இணையும் இந்த முன்னெடுப்பு ’நம்ம ஸ்கூல்’ திட்டம் என்று அழைக்கப்படுகிறது. டி.வி.எஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனை தலைவராகவும், செஸ் கிராண்ட் மாஸ்டர் திரு.விஸ்வநாதன் ஆனந்தை நல்லெண்ணத் தூதராகவும் இந்த முயற்சியில் இணைந்துள்ளனர்.
நம்ம ஸ்கூல் திட்டத்தைத் தொடங்கிவைத்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
''தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய அரசால் மட்டுமே முடியாது. அரசுப் பள்ளிகளைத் தனியார் பங்களிப்போடு மேம்படுத்த உள்ளோம்.
நம் வாழ்வில் மறக்க முடியாத வசந்த காலம் பள்ளிக் காலம் ஆகும். பள்ளிப் பருவத்தில் துள்ளித் திரிந்த காலத்தை யாராலும் மறக்க முடியாது. நேற்று பார்த்தவரைக் கூட மறந்துவிடுவோம். ஆனால் பள்ளிப் பருவத்தில் கற்றுக் கொடுத்த ஆசிரியரை மறக்க மாட்டோம்.
தாங்கள் படித்த பள்ளிக்குச் செய்யும் நன்றியாக, பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவலாம். அரசுப் பள்ளிகள் அரசின் சொத்து மட்டுமல்ல, மக்களின் சொத்தும்தான். நமது மாநிலத்தில் உள்ள குழந்தைகளுக்கு துணை நிற்பதற்காக ஒன்றிணைய விரும்பும் அனைவருடனும் கைகோர்க்க அரசு விழைகிறது. இம்முயற்சிக்கென பெறப்படும் பங்களிப்பு அனைத்தும் அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே செலவிடப்படும்''.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
நிகழ்வில் பேசிய வேணு சீனிவாசன், “நம்மில் பெரும்பாலானோருக்கு, பள்ளி நினைவுகள் எப்போதுமே மனதுக்கு நெருக்கமான உணர்வை அளிப்பவை. குடும்பத்தாரோடு இருப்பதைப் போலவே பள்ளியுடனான உறவு பின்னிப் பிணைந்ததாக இருக்கும். நமது வேர்களுடன் மீண்டும் இணைவது என்பது உலகமெங்கும் புலம் பெயர்ந்துள்ள நமது தமிழ் மக்களுக்கான ஆழமான உணர்வாகும். நமது பள்ளிகளிடமிருந்து நாம் பெற்றதை நன்றியுடன் திருப்பித் தர, நமது வேர்களை மீண்டும் கண்டறிய நம்ம ஸ்கூல் திட்டம் உதவும்” என்று தெரிவித்தார்
நிகழ்ச்சியின்போது, அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்கு துணைநின்ற உள்ளூர்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அரசுப் பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் மரியாதை செய்து பாராட்டினார். கோயம்புத்தூர் அருகே சூலூரில் தான் பயின்ற அரசுப் பள்ளியை தனது வகுப்புத் தோழர்களுடன் சேர்ந்து தத்தெடுத்து மேம்படுத்திய திரைக் கலைஞர் சிவக்குமார் மரியாதை செய்யப்பட்டு பாராட்டப்பட்டவர்களில் ஒருவர்.
விஸ்வநாதன் ஆனந்த் உரையாற்றுகையில், “தமிழ்நாட்டின் லட்சியங்களையும் கனவுகளையும் நம் குழந்தைகள் தங்கள் தோள்களில் சுமக்கப் போகிறார்கள். அந்த லட்சியங்களையும் கனவுகளையும் பிரதிபலிக்கும் வண்ணம் நம்ம ஸ்கூல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது வெறும் ஆரம்பம்தான்
நமது அரசுப் பள்ளிகளுக்கு ஆதரவாக ஒன்றிணைவதற்கு ஓர் இணையதளம் உள்ளது. இது வெறும் ஆரம்பம்தான். நம்ம ஸ்கூல் திட்டம் என்ன செய்ய விரும்புகிறதோ அதை அடைய விடாமுயற்சி, வலிமை, ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தேவை. வலுவான அரசுப் பள்ளிகளின் நம் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப நம்ம ஸ்கூலுக்கு உறுதுணையாக இருப்போம்” என தெரிவித்தார்.