உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான கோலி, உடலை கட்டுக்கோப்புடன் வைத்து இருப்பதில் அதிக கவனம் செலுத்துவது அனைவரும் அறிந்ததே. இந்திய வீரர்கள் பலரும் ஃபிட்டான உடலவாகுவை பின்பற்ற, கோலியே ஒரு தொடக்க புள்ளியாகவும் திகழ்கிறார். விளையாட்டு உலகில் முகவும் ஃபிட்டாக இருக்கும் வீரர்களில், கோலியும் ஒருவர் ஆவார். இதன் காரணமாகவே காயத்தால் இந்திய அணிக்காக அவர் விளையாட முடியாமல் போன தருணங்கள் என்பது மிகவும் சொற்பமானதாக உள்ளது.
மாமிசத்தை கைவிட்ட கோலி:
ஆரம்ப காலங்களில் மாமிசத்தை விரும்பி உண்டு வந்த கோலி, ஆட்டுக்கால், கோழி ,மீன் போன்ற உணவுகளை அதிகளவில் உண்டு வந்தார். பட்டர் சிக்கன் அவரது ஃபேவரட் ரெசிப்பியாகவும் இருந்தது. இதனிடையே ஒடிடி தளத்தில் வெளியான ஒரு தொடரை பார்த்து விட்டு, மாமிசம் உண்ணும் பழக்கத்தை முழுமையாக கைவிட்டுவிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து உணவில் அசைவத்தை சேர்த்துக் கொண்டதே கிடையாது எனவும், கோலியே தெரிவித்துள்ளார்.
தீவிர உடற்பயிற்சியில் கோலி:
இதனிடையே, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை தொடரை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஆனால், கோலி மற்றும் ரோகித் போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதி வங்கதேசத்தில் தொடர உள்ள ஒருநாள் தொடரில், இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் கோலி, ரோகித் ஆகியோர் இணைய உள்ளனர். இந்த சூழலில் வடநாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த கோலி, வங்கதேச தொடருக்கு தயாராவதற்கான பயிற்சியை தொடங்கியுள்ளார்.
உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட கோலி:
கிரிக்கெட் பயிற்சிக்கு மத்தியில் உடற்பயிற்சியிலும் கோலி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் தான் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த வீடியோவை, கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவிற்கு கீழே, புலியை குறிப்பிடும் எமோஜி ஒன்றை சூர்யகுமார் யாதவ் பதிவிட்டு இருந்தார். அதைதொடர்ந்து, மாமிசம் சாப்பிட்டால் தான் கட்டு மஸ்தான உடல்வாகு கிடைக்கும் என்று முன்பு சொன்னார்கள் என, ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
கோலியின் நச் பதில்:
ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த கோலி, ஹாஹா என்ற எமோஜியுடன் உலகின் மிகப்பெரிய கட்டுக்கதை இது தான் எனவும் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார். கோலியின் இந்த பதிலை தொடர்ந்து, மாமிசம் உண்டால் தான் உடல் வலுப்பெற முடியும் என ஒரு தரப்பினரும், அது பொய் என்று இன்னொரு தரப்பும் கூறி, கமெண்ட் செக்சனில் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளனர்.