மும்பை வான்கடே மைதானத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே 14-வது ஐ.பி.எல், ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது.


அவர்களின் தேர்வு தவறு என்று உணர்த்தும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ஆட்டத்தை தொடங்கினர். தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட்டும், டுப்ளிசிசும் ஆட்டத்தை தொடங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இருவரையும் பிரிக்க கொல்கத்தா கேப்டன் மோர்கன் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனாலும், இருவரும் மைதானத்தின் அனைத்து பக்கத்திலும் பந்துகளை சிதறவிட்டனர்.




ருதுராஜ் கெய்க்வாட் 42 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 64 ரன்களை குவித்தார். சதக்கூட்டணி அமைத்த இந்த பார்ட்னர்ஷிப் 115 ரன்களில்தான் பிரிந்தது. இதையடுத்து, களமிறங்கிய மொயின் அலியையும் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 25 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் நங்கூரம் போல நின்ற டுப்ளிசிஸ் பந்துகளை சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டுக் கொண்டிருந்தார்.


மொயின் அலிக்கு பிறகு களத்தில் இறங்கிய தோனியும் அதிரடியை கையில் எடுத்தார். 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் தோனி 8 பந்துகளில் 17 ரன்களை எடுத்து ரஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஒரு பந்தை மட்டும் சந்தித்த ரவீந்திர ஜடேஜா ஒரு பந்தை மட்டும் சந்தித்து, அதையும் சிக்ஸருக்கு அனுப்பினார். இறுதியில் ஜடேஜா 6 ரன்களுடனும், டுப்பிளிசிஸ் 60 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 95 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை குவித்தது.




நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை அணி பழைய சென்னை அணியாக தங்களது ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தினர். பாட் கமின்ஸ்  4 ஓவர்கள் முடிவில் 58 ரன்களை வாரி வழங்கினார். அவருக்கு அடுத்தபடியாக பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்கள் வீசி 49 ரன்களை விட்டுக்கொடுத்தார். தொடர்ந்து ஆடிவரும் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.