மும்பையில் உள்ள ‘செவ்ரி’ தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மூத்த பெண் மருத்துவ அதிகாரி டாக்டர் மனிஷா ஜாதவ் இறப்பதற்கு  ஒருநாள் முன்பாக தனது ஃபேஸ்புக் "இது எனது கடைசி காலை வணக்கமாக இருக்கலாம்" என்று பதிவிட்டிருக்கிறார்.  51 வயதான டாக்டர் மனிஷா ஜாதவ் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ஃபேஸ்புக் "இது எனது கடைசி காலை வணக்கமாக இருக்கலாம். இந்த தளத்தில் உங்களை இனியொருமுறை சந்திக்க வாய்பில்லாமல் கூட போகலாம் . அனைவரும் பத்திரமாக இருந்து கொள்ளுங்கள். உடலுக்குத்தான் அழிவு. ஆத்மா என்றும் அழியாதது" என்று பதிவிட்டார்.   


 



இந்த கருத்தை பதிவிட்ட அடுத்த 36 மணிநேரத்துக்குள்  மனிஷா ஜாதவ் கொரோனா நோய்த்தொற்று தாக்குதல் காரணமாக மரணமடைந்தார். இந்த சம்பவம், நம்மை துயரத்தில் ஆழ்த்துகிறது. கோவிட்-19 ஐசியு சிகிச்சை பிரிவில் இருந்தவாறு இந்த உலகத்துக்கு அவர் வெளியிட்ட "உடலுக்குத்தான் அழிவு. ஆத்மா என்றும் அழியாதது" என்னும் செய்தி முன்களப் பணியாளர்களின் துயரத்தை ஒரு வரியில் ஒட்டுமொத்தமாக உணர்த்துவதாக உள்ளது.


மருத்துவர்கள் உயிரிழப்பு தொடர்கிறது:   


இந்தியாவில் இதுவரை கொரோனா நோய்த் தொற்று காரணமாக 747 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக தமிகழத்தில் 89 மருத்துவர்களும், மேற்குவங்கத்தில் 80 மருத்துவர்களும்  உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 48 மருத்துவர்கள், 10 செவிலியர்கள் உள்ளிட்ட 179 முன்கள சுகாதாரப் பணியாளர்கள் இயற்கை எய்தியுள்ளனர். மேலும், 17, 975 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.           



மனிஷா ஜாதவ்


 


தீவிரமெடுக்கும்  இரண்டாவது அலை:      


இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கடந்த 24 மணிநேரத்தில் 2,95,041 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 62,097 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 29,574 பேரும், டெல்லியில் 28,395 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 2,023 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் 519 பேர் மரணமடைந்துள்ளனர்.