கரூர் கூடைப்பந்து குழு இணைந்து நடத்தும் LR.G நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 64ம் ஆண்டு ஆண்களுக்கான அகில இந்திய கூடைபந்து போட்டியும், KVB சுழற்கோப்பைக்கான 10ம் ஆண்டு பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் 22/05/2024 முதல் 27/05/2024 வரை 6 நாட்கள் நடைபெறுகிறது.


 


 




இதற்கான செய்தியாளர் சந்திப்பு கரூர் நகர பகுதியில் அமைந்துள்ள ஹேமலா ஹோட்டலில் நடைபெற்றது. அப்பொழுது பேசிய கரூர் கூடைபந்து கழகத்தின் தலைவர் விஎன்சி பாஸ்கர், “ஆண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் முதல் இடம் பெறுபவர்களுக்கு LR.G நாயுடு நினைவு சுழற்க்கோப்பை மற்றும் முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாவது இடம் பெறுபவர்களுக்கு LRG.வரதராஜு நாயுடு நினைவு சுழற்கோப்பை மற்றும் இரண்டாவது பரிசு ரூ80 ஆயிரம்  மூன்றாம் இடம் சுழற்கோப்பை மற்றும் மூன்றாம் பரிசு ரூ60 ஆயிரம், நான்காம் இடம் பெறுபவர்களுக்கு M.R.பழனிசாமி நினைவு சுழற்கோப்பை மற்றும்  நான்காம் பரிசு ரூ50 ஆயிரம்  வழங்கப்பட உள்ளது.


 




போட்டியில் 3000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியில் அகில இந்திய அளவில் தலைசிறந்த எட்டு ஆண்கள் அணியும் நான்கு பெண்கள் அணியும் கலந்து கொள்கின்றனர். ஆண்கள் போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையிலும் பெண்கள் போட்டிகள் லீக் முறையில் நடைபெறுகிறது. வருகிற மே 22 ஆம் தேதி துவக்க நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு கையுந்து பந்து கழகத்தின் பொதுச்செயலாளர் மார்ட்டின் சுதாகர் மற்றும் கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைக்க உள்ளனர்.


 


 




 


அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் 78 ஆண் வீரர்களும் 37 பெண் வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களில் 18 இன்டர்நேஷனல் வீரர்களும், 57 தேசிய அளவிலான வீரர்களும், 10 சர்வீஸ் அளவிலான வீரர்களும், 14 மாநில அளவிலான வீரர்களும், 16 ரயில்வே அளவிலான வீரர்களும் கலந்து கொள்கின்றனர். முதல்முறையாக கரூர் கூடைப்பந்து குழுவிற்கு கரூர் பேஸ்கட்பால் கிளப் எனும் மொபைல் செயலி மூலம் போட்டிகள் குறித்தான விளையாட்டு செய்திகள் அனைத்தும் பதிவு செய்யப்படவுள்ளது” எனத் தெரிவித்தார்.