Doctor CPR: விஜயவாடாவில் மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்த 6 வயது சிறுவன், பெண் மருத்துவரின் உடனடி நடவடிக்கையால் உயிர் பிழைத்தான்.


சிறுவனின் உயிரை காப்பாறிய மருத்துவர்:


மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்பார்கள், அதை நிரூபிக்கும் விதமான சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. சாலையில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்த சிறுவன், பேச்சு மூச்சின்றி கிடக்க பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டனர்.  அப்போது அவ்வழியே சென்ற மருத்துவர்  உடனடியாக செயல்பட்டு, சிறுவனுக்கு முதலுதவி செய்தார். அதாவது சிபிஆர் செய்து சிறுவனை மூச்சு விட வைத்தார். அதன்பின், சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முழுமையாக குணமடைந்தான். சரியான நேரத்தில் சிபிஆர் செய்து சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவருக்கு, தற்போது பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.






நடந்தது என்ன?


விஜயவாடா அய்யப்பநகரை சேர்ந்த ஆறு வயது சிறுவன் சாய் (6) கடந்த 5ம் தேதி மாலை எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தான்.  இதைப் பார்த்த பெற்றோர் உடனடியாக குழந்தையை தோளில் தூக்கிக் கொண்டு கதறி அழுதபடி மருத்துவமனைக்கு விரைந்தனர். அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த மெட் சீ மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் நன்னப்பனேனி ரவளி, சிறுவனை தூக்கிக் கொண்டு பெற்றோர் ஓடுவதை கண்டுள்ளார். விஷயம் தெரிந்ததும் சிறுவனை பரிசோதித்து சாலையிலேயே படுக்க வைத்தார். பின்னர், அங்கு சிறுவனுக்கு சிபிஆர் (கார்டியோபுல்மோனரி புத்துயிர் ) செய்தார். அதன்படி, ஒருபுறம் சிறுவனின் மார்பில் அழுத்தினார்.  சிறுவனின் வாயோடு வாய் வைத்து ஊதுமாறு அங்கிருந்த மற்றொரு நபருக்கு அறிவுறுத்தினார். மார்புப் பகுதியில் வேகமாக அறைவது போன்றும் அழுத்தம் கொடுத்துள்ளார். 7 நிமிடங்களுக்கு மேல் இப்படி செய்தபிறகு,  சிறுவன் மூச்சுவிட தொடங்கியுள்ளான். உடனடியாக சிறுவனை பைக்கில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், சிறுவனின் தலையை சற்று கீழே வைத்து, சரியாக மூச்சு விடும்படி படுக்க அழைத்துச் செல்லுமாறும் மருத்துவர் ரவளி அறிவுறுத்தியுள்ளார்.


குணமடைந்து வீடு திரும்பிய சிறுவன்:


சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், சிகிச்சை வழங்கப்பட்டது. தொடர்ந்து முழுமையாக குணமடைந்துள்ளார்.  24 மணி நேரம் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு தலையின் சி.டி.ஸ்கேன் செய்யப்பட்டது. எந்த பிரச்சனையும் இல்லை என்று உறுதியான பிறகு சிறுவன் வீடு திரும்பியுள்ளான். இந்நிலையில், சிறுவனுக்கு மருத்துவர் ரவளி சிபிஆர் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில் இதேபோன்று ஒரு காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கும். ரஜினிகாந்த் மின்சாரம் பாய்ந்து சிறிது நேரம் உயிரற்ற நிலையில் இருப்பார். அவரை சிறிது நேரம் கழித்து சிபிஆர் செய்து மருத்துவராக வரும் ரகுவரன் காப்பாற்றுவார். 


இந்நிலையில்தான் அந்த சிறுவன் ரியல் சிவாஜியாக உயிர் பிழைத்து வந்துள்ளார்.