ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி பிரித்வி ஷா (53) மற்றும் ரிஷப் பந்த் (37) ஆகியோரின் ஆட்டத்தால் 159 ரன்கள் எடுத்தது. 


இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் கேன் வில்லியம்சன் மட்டும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் விளாசினார். எனினும் 20 ஓவர்களின் முடிவில் சன்ரைசர்ஸ் அணியும் 159 ரன்கள் அடித்தால் போட்டி டை ஆனது. எனவே வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இதில் முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 6 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய டெல்லி அணி 7 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் நடைபெறும் முதல் சூப்பர் ஓவர் இதுவாகும். 






இந்நிலையில் மீண்டும் சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது தொடர்பாக சன்ரைசர்ஸ் அணியின் வீரர் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “எப்போதும் சூப்பர் ஓவரில் இரண்டாவதாக வருவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. சூப்பர் ஓவரில் இரண்டாவதாக பேட்டிங் செய்தால் சற்று சாதகமாக இருக்கிறது. எனினும் இந்த போட்டியிலிருந்து நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு நாங்கள் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவோம்” எனத் தெரிவித்தார். 


கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி 4 முறை தோல்வி அடைந்துள்ளது. அதில் கேன் வில்லியம்சன் இரண்டு முறை சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்திருந்தார். குறிப்பாக 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது. அதில் கேன் வில்லியம்சன் விளையாடினார். 




மேலும் 2020ஆம் ஆண்டு இந்தியாவுடன் நடைபெற்ற டி20 தொடரில் நியூசிலாந்து அணி இரண்டு முறை சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது. அதிலும் ஒரு போட்டியில் சூப்பர் ஓவரில் கேன் வில்லியம்சன் விளையாடிருந்தார். 


கேன் வில்லியம்சனின் சூப்பர் ஓவர் சோகம் சர்வதேச போட்டிகள் மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரிலும் அவரை துரத்துகிறது. 2019-ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிராக சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது. அதில் மும்பை அணிக்கு எதிரான சூப்பர் ஓவர் போட்டியில் கேன் வில்லியம்சன் சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தார். 




இந்தச் சூழலில் நேற்று டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற சூப்பர் ஓவரிலும் சன்ரைசர்ஸ் அணிக்கு கேன் வில்லியம்சன் சூப்பர் ஓவரில் களமிறங்கினார். இந்த முறையும் சன்ரைசர்ஸ் அணி சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.