விளையாட்டு இட ஒதுக்கீட்டில் தற்போது உள்ள 3 சதவீதம் என்ற விகிதத்தை அதிகரித்து வழங்க வேண்டும் என்றும் பைசன் படத்துக்காக நடிகர் துருவ் விக்ரமுக்கு இரண்டு வருடம் கபடி பயிற்சி அளித்தேன் என்றும் கரூரில் கபடி வீரர் மணத்தி கணேசன் பேட்டியளித்தார்.

Continues below advertisement

சிறப்பு அழைப்பாளராக மணத்தி கணேசன்

கரூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. மொத்தம் 50 அணிகள் பங்கேற்றனர். முதலிடத்தை பிடித்த குட்டப்பட்டி அணியினருக்கு 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சுழற் கோப்பை, இரண்டாம் இடம் செவ்வந்திபாளையம் அணியினருக்கு 50,000 ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பை, மூன்றாம் மற்றும் நான்காம் இடம் பிடித்த அணியினருக்கு 25,000 ரூபாய் ரொக்கம் மற்றும் சுழல் கோப்பை வழங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளராக அர்ஜுனா விருது பெற்ற முன்னாள் கபடி வீரரும், பைசன் திரைப்பட நிஜ கதாநாயகன் மணத்தி கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோப்பைகள் வழங்கினார்.

Continues below advertisement

இதனைத்தொடர்ந்து, மணத்தி கணேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “18 வயதுக்குட்பட்டவருக்கான பிரிவில் வெற்றி பெற்ற கண்ணகி நகர் கார்த்திகா, திருவாரூர் அபினேஷ் ஆகிய 2 இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அரசு தலா 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கியுள்ளது. கண்ணகி நகர் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அனைத்து வகையான விளையாட்டுகளிலும் தமிழ்நாடு சிறப்பாக உள்ளது. ஒரு காலத்தில் ஹரியானா மாநிலம் விளையாட்டில் சிறப்பாக இருந்தது. தற்போது தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்

விளையாட்டு இட ஒதுக்கீட்டில் தற்போது உள்ள 3 சதவீதம் என்ற விகிதத்தை அதிகரித்து வழங்க வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சலுகை இருந்ததால், எனக்கு மின்வாரியத்தில் பணி கிடைத்தது. நானும் சிறந்து விளங்க முடிந்தது. எனவே, மீண்டும் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். 

பைசன் காலமாடன் படத்தை தம்பி மாரி செல்வராஜ் சிறப்பாக இயக்கி இருந்தார். எனது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்துள்ளனர். நடிகர் துருவ் விக்ரமுக்கு இரண்டு வருடம் கபடி பயிற்சி அளித்தேன். என்னுடைய சிறுவயதில் ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்தபோது, எனது பள்ளி விளையாட்டு ஆசிரியர் கபடி விளையாட்டில் நான் சிறப்பாக இருப்பதாக தெரிவித்து, என்னை மேலும் ஊக்கப்படுத்தி பயிற்சி அளித்தார். அதனால் தான் இன்று இந்த அளவுக்கு வளர்ந்தேன” என்றார்.