தன்னுடைய முதல் படமான திருப்பாச்சியி உருவானது பற்றி இயக்குநர் பேரரசு நேர்காணல் ஒன்றில் கூறியதைப் பார்க்கலாம்.
கமர்ஷியல் இயக்குநர் பேரரசு
தமிழில் திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, திருவண்ணாமலை, பழனி, திருத்தணி என ஊர்களின் பெயர்களின் படங்களை எடுத்து தனக்கென தனியிடம் பிடித்தவர் இயக்குநர் பேரரசு. இவரின் முதல் படமாக 2005 ஆம் ஆண்டு வெளியானது திருப்பாச்சி. ஆக்ஷன் ஹீரோவாக பரிணாமிக்க தொடங்கிய விஜய்க்கு செண்டிமெண்ட் காட்சிகளும் ஒர்க் அவுட் ஆகும் என வெளிகாட்டி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் த்ரிஷா, பெஞ்சமின், ஆட்டோகிராப் மல்லிகா, கோட்டா ஸ்ரீனிவாசராவ், பசுபதி என பலரும் நடித்திருந்தனர்.
விஜய் என் சாய்ஸ் இல்ல
ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் பேரரசு, நான் விஜய்க்கு கதை சொல்லிய பிறகு தான் அவர் ஆக்ஷன் ஹீரோவாக நடித்த திருமலை, கில்லி ஆகிய படங்கள் வெளியானது. நான் இயக்குநராக வரும்போது ஒரு கனவு படம் ஒன்று இருக்கும். அதைத்தான் இயக்க வந்தேன். ஆக்ஷன் படம் செய்வேன் என யோசித்ததே இல்லை. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரியிடம் கதை சொல்ல சென்றேன்.
ஆனால் ஆரம்பமே ஒரு குண்டை தூக்கி அவர் போட்டார். அதாவது விஜய்யின் கால்ஷீட் இருக்கு. அவருக்கு தகுந்த மாதிரி கதை இருந்தால் சொல்லுங்கள் என சொன்னார். அப்படித்தான் திருப்பாச்சி படத்தின் கதையை சொன்னேன்.
மேலும் இப்படத்தில் ஹீரோயினாக முதலில் த்ரிஷா என்னுடைய தேர்வு கிடையாது. முதலில் இந்த படத்தில் விஜய் நடிப்பதாகவே இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் விஜய் நடிக்க ஒப்பந்தமான பிறகு பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றது. அப்போது அசின் தான் என்னுடைய முதல் சாய்ஸாக இருந்தது. நான் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியிடம் இதனை தெரிவிக்க அவரும், பின்னர் விஜய்யும் ஓகே சொல்லி விட்டார்கள். இதனையடுத்து நான் அசினிடம் சென்று அவர் போர்ஷனை சொல்ல, அவரும் விஜய் படம் என்பதால் உடனடியாக நடிக்க சம்மதித்து விட்டார்.
அப்போது அசினுக்கு தமிழில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படம் மட்டுமே வெளியாகியிருந்தது. ஆனால் நான் அவரை தேர்வு செய்ய காரணம் அந்த படம் கிடையாது. தெலுங்கில் நாகார்ஜூனாவுடன் ஒரு படம் அந்த சமயத்தில் நடித்திருந்தார். அதில் சில காட்சிகளில் நாகார்ஜூனாவை தூக்கி சாப்பிடும் அளவுக்கு பிரமாதமாக செய்திருப்பார். அதே மாதிரி திருப்பாச்சி படத்திலும் விஜய்யை மிரட்டும் கலகலப்பான காட்சிகள் இருக்கும் என்பதால் இந்த படத்துக்கு அவர் சரியாக இருப்பார் என நினைத்தேன்.
பின்னர் திருப்பாச்சி படத்துக்காக மோகன் ஸ்டூடியோவில் சென்னையில் தங்கச்சி வீடு, கும்பிட போன தெய்வம் பாடலில் வரும் கோயில் போன்றவை செட் போடப்பட்டது. ஆனால் அதில் அசின் நடிக்க வேண்டிய நிலையில் அவரின் கால்ஷீட் தேதியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது. அந்த தேதியில் அசின் ஒரு தெலுங்கு பட ஷூட்டிங்கில் இருந்தார். வருவதற்கு ஒரு மாதம் ஆகும் என சொல்லி விட்டார். அதுவரை போடப்பட்ட செட்டை வைத்து காத்திருக்க முடியாது என்பதால் உடனடியாக த்ரிஷாவை அணுகி ஒப்பந்தம் செய்தோம்" என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.