ஜுனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒடிசாவின் புபனேஷ்வரில் வைத்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக ஆடி வரும் இந்திய அணி காலிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது.
1979 முதல் ஜுனியர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இப்போது நடைபெற்று வருவது 12 வது ஜுனியர் உலகக்கோப்பை தொடராகும். ஜெர்மனிக்கு அடுத்தப்படியாக இந்திய அணி இரண்டு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. 2001 இல் நடைபெற்ற தொடரை வென்ற இந்திய அணி கடைசியாக 2016 இல் நடைபெற்ற தொடரையும் வென்றிருந்தது. அந்த தொடரும் இந்தியாவிலேயே நடந்திருந்தது. இறுதிப்போட்டியில் பெல்ஜியமை வீழ்த்தி இந்திய அணி உலகக்கோப்பையை வென்றிருந்தது.
2021 இந்த ஆண்டு இந்திய ஹாக்கிக்கு ரொம்பவே முக்கியமான ஆண்டாக கருதப்படுகிறது. 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸிற்கு பிறகு 41 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டுதான் ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி பதக்கத்தை வென்றிருந்தது. ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி வென்ற அந்த வெண்கல பதக்கம் இந்திய விளையாட்டுத்துறை வரலாற்றிலேயே முக்கியமான ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. இதே டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்திய பெண்கள் அணியும் மிகச்சிறப்பாக செயல்பட்டு நான்காவது இடத்தை பிடித்திருந்தனர்.
இந்த மகத்தான வெற்றிகளின் தொடர்ச்சியாக இந்திய அணி இப்போது ஜுனியர் உலகக்கோப்பை ஹாக்கியிலும் காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் நான்கு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டிருந்தது. இந்திய அணி Pool B இல் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இருந்தது. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் மற்ற அணிகளுடன் ஒரு போட்டியில் மோத வேண்டும். க்ரூப் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதிப்பெறும்.
இந்திய அணி தனது முதல் போட்டியில் ஃப்ரான்ஸிற்கு எதிராக 5-4 என நெருங்கி வந்து தோற்றிருந்தது. இதனால் அடுத்த இரண்டு போட்டிகளையுமே இந்தியா வென்றே ஆக வேண்டும் என்ற சூழல் நிலவியது. ஃப்ரான்ஸிற்கு எதிரான அந்த தோல்வியிலிருந்து மீண்டு வந்து அடுத்த போட்டியில் கனடாவுக்கு எதிராக 13-1 என இந்திய அணி மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்நிலையில் தங்களது மூன்றாவது மற்றும் கடைசி க்ரூப் போட்டியில் போலந்தை இந்திய அணி நேற்று சந்தித்தது. இந்தியா, போலந்து இரண்டு அணிகளுமே தலா ஒரு போட்டியில் ஆடி சமநிலையில் இருந்தன. இருவரும் சந்தித்துக் கொள்ளும் இந்த போட்டியில் யார் வெல்கிறாரோ அவர்களே காலிறுதி சுற்றுக்கு தகுதிப்பெற முடியும் என்ற நிலையில் போட்டி தொடங்கியது.
தொடக்கத்திலிருந்தே இந்திய அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 8-2 என மீண்டும் ஒரு பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி காலிறுதி போட்டிக்கும் தகுதிப்பெற்றிருக்கிறது. மூன்று போட்டிகளிலும் சேர்த்து இந்திய அணியின் சார்பில் சஞ்சய் 8 கோல்களை அடித்து மிரட்டியிருக்கிறார். ஃப்ரான்ஸ் மற்றும் கனடாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டியிலுமே ஹாட்ரிக் அடித்திருந்தார்.
Pool B இல் ஆடிய அத்தனை போட்டிகளிலும் வென்று ஃப்ரான்ஸும் காலிறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற அணிகளில் யாரோ ஒருவரை இந்திய அணி இறுதிப்போட்டியில் சந்திக்க வேண்டும் என்பதால், அந்த போட்டி இன்னும் பயங்கர சுவாரஸ்யமாக இருக்கும். காலிறுதி போட்டிகள் டிசம்பர் 1 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.