தடகள உலகில் வளர்ந்து வரும் வீரர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெஷ்வின் ஆல்ட்ரின். நீளம் தாண்டுதலில் 6 முறை தேசிய சாம்பியன் பட்டத்தை இவர் வென்றுள்ளார். அத்துடன் 20 வயதுக்குட்பட்டோருக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் ஜெஷ்வின் தேசிய சாதனையை தன்வசம் வைத்துள்ளார். இவர் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தகுதிச் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். 


இந்நிலையில் லிச்சென்ஸ்டீன் நாட்டில் நடைபெற்ற கோல்டன் ஃபிளை சீரிஸ் தொடரில் நீளம் தாண்டுதல் போட்டியில் இவர் பங்கேற்றார். இந்தப் போட்டியில் தன்னுடைய இரண்டாவது முயற்சியில் இவர் 8.12 மீட்டர் தூரம் தாண்டினார். அத்துடன் இந்தத் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்றார். இது தொடர்பான வீடியோவை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 






அதில், “லிச்சென்ஸ்டீன் நகரில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் நான் 8.12 மீட்டர் நீளம் தாண்டினேன். இந்த ஆண்டு சீசனில் இன்னும் ஒரு சுற்று போட்டிகள் எஞ்சியுள்ளன. இந்த இடத்திற்கு வர உதவிய இந்திய தடகள சங்கம் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. தொடர்ந்து முன்னேறி கொண்டே இருப்பேன்” எனப் பதிவிட்டுள்ளார். மீண்டும் 8 மீட்டரை தாண்டி நீளம் தாண்டிய ஜெஷ்வின் ஆல்ட்ரீனுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


முன்னதாக உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க முதலில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஏனென்றால் இவர் மோசமான ஃபார்மில் இருப்பதால் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற தகுதி போட்டியில் இவர் 7.93 மீட்டர் நீளம் தாண்டினார். இதைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு அளிக்க இந்திய தடகள சங்கம் முடிவு எடுத்தது. 


அதன்பின்னர் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற ஜெஷ்வின் ஆல்ட்ரின் தகுதிச் சுற்றில் 7.78 மீட்டர் நீளம் தாண்டினார். அத்துடன் தகுதிச் சுற்றில் 9வது இடத்தை பிடித்தார். அது கடும் ஏமாற்றமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது அவர் மீண்டும் 8 மீட்டரை தாண்டி குதித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெஷ்வின் ஆல்ட்ரின் தன்னுடைய சொந்த சிறப்பான தூரமாக 8.37 மீட்டரை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: 19 வயதில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம்.. 49 ஆண்டுகால ஏடிபி தரவரிசையில் சாதனை படைத்த அல்கரஸ்