அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஆரம்ப முதலே ஆச்சர்யங்கள் பல நிறைந்ததாக இருந்தது. முதல் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட, இரண்டாவது போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது போட்டி, சிறந்த கிரிக்கெட்டிங் அனுபவத்தை கொடுத்தது. ரெக்கார்டுகள் பல பதிவு செய்யப்பட்டன. 


டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய ஜேன்மான் மாலன், குவிண்டின் டி காக் ஆகியோர் அதிரடியான ஓப்பனிங்கை கொடுத்தனர். இந்த கூட்டணி, மொத்தம் 225 ரன்களை எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணிக்காக, ஒப்பனிங் பேட்ஸ்மேன்கள் அடித்த அதிக ரன்கள் இதுவே. 






இந்த போட்டியின் மூலம், கிரிக்கெட் உலகிற்கு தன்னை அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார் ஜேன்மான் மாலன். இதுவரை, தென்னாப்ரிக்கா அணியில் சில கவனிக்கத்தக்க பேட்ஸ்மேன்கள் இருந்திருந்தாலும், ஜேன்மான் மாலன் தன்னை ஒரு பேட்டிங் சூப்பர்ஸ்டாராகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். 16 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என மொத்தம் 169 பந்துகளில் 177 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார் மாலன். தென்னாப்ரிக்கா ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில், தனிநபர் அடித்த அதிகபட்ச ஸ்கோரில் நான்காவது இடத்தைப் பிடித்தார். 






25 வயதேயான ஜேன்மான் மாலன், 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடியதே ஒரு நாள் போட்டியில் அவருக்கு அறிமுக போட்டியாகும். நேற்று அயர்லாந்துக்கு எதிரான போட்டி, அவர் விளையாடிய 7வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை 6 இன்னிங்ஸில் களமிறங்கியுள்ள அவர், மொத்தம் 483 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் தொடரில், 6 இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்தவர் இவரே.  406 ரன்களுடன் பாகிஸ்தானின் இன்சமாம்-உல்-ஹக் இரண்டாவது இடத்தில் உள்ளார். 


முதல் இன்னிங்ஸில் ரெக்கார்டுகளை உடைத்த தென்னாப்ரிக்க பேட்ஸ்மேன்களுக்கு, அடுத்த இன்னிங்ஸில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. 347 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். ஆனால், தொடக்கம் முதலே அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆனால், எட்டாவதாக களமிறங்கிய சிமி சிங், அயர்லாந்தின் நம்பிக்கை நாயகனாக களத்தில் நின்றார்.





அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்துவிட, 14 பவுண்டரிகள் விளாசிய சிமி சிங் தென்னாப்ரிக்கா அணியின் வெற்றி வாய்ப்பை சில நேரங்களுக்கு தன்வசம் இழுத்து பிடித்திருந்தார். 91 பந்துகளில் சதம் கடந்து போட்டி முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 






இந்தியா, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சிமி சிங், அயர்லாந்து அணிக்காக விளையாடி வருகின்றார். 34 வயதான அவர், தனது முதல் கிரிக்கெட்டிங் சாதனையை படைத்துள்ளார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில், எட்டாவதாக களமிறங்கி சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 


ஆனால், 47.1 ஓவரின் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அயர்லாந்து அணி 276 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், கடைசி ஒரு நாள் போட்டியை வென்று ஒரு நாள் தொடரை அயர்லாந்து அணியுடன் சமன் செய்தது தென்னாப்ரிக்கா அணி.