சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரவீந்திர ஜடேஜா நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.



இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜாவை நியமித்தது சென்னை அணி நிர்வாகம். தோனியை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த முடிவு ஏமாற்றத்தை அளித்தாலும், நிர்வாகத்தின் இந்த முடிவை ஏற்றிருந்தனர். ஆனால், ஜடேஜா தலைமையிலான சென்னை அணி தொடர்ந்து தோல்வியை மட்டுமே தழுவியதோடு, புள்ளிப்பட்டியலில் யாருக்கு கடைசி இடம் என்பதில் மும்பை அணியுடன் போட்டிப் போட்டுக்கொண்டிருந்தது. ரசிகர்கர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்க தோனியையே மீண்டும் கேப்டனாக அறிவித்தது சென்னை அணி நிர்வாகம். பேட்டிங், பவுலிங் மற்றும் கேப்டன்ஸி என்று இந்த தொடரில் அனைத்து வகையிலும் ஜடேஜா சொதப்பியதால் அவர் மீது அணி நிர்வாகம் ஏமாற்றத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 




சமீபத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா சேர்க்கப்படாதது குறித்து ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். இன்னொரு வார்னர் ஆகிறாரா ஜடேஜா, ஜடேஜாவை ஓரம் கட்டுகிறார்களா தோனியும், நிர்வாகமும், சமீபத்தில் சென்னை அணி வீரர் கான்வேவை திருமணம்  செய்துகொண்ட கிம் கான்வேவைக் கூட இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜடேஜாவை ஃபாலோ செய்யாதது ஏன் என்று பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியிருந்தனர்.




இந்த நிலையில், நடப்புத் தொடரில் இருந்து ஜடஜா விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது சென்னை அணி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது மஹிபால் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்ற போது கீழே விழுந்ததில் ஜடேஜாவுக்கு கையில் காயம் ஏற்பட்டது. எனினும் அந்த போட்டியில் ஜடேஜா பேட்டிங் செய்தார்.




காயம் சரியாகாததால் அவருக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான போட்டியின் போது ஓய்வளிக்கப்பட்டது. இந்தநிலையில், ஜடேஜாவுக்கு கையில் ஏற்பட்ட காயத்தில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாததால் இந்த தொடரில் இருந்து அவர் விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.










நடப்பாண்டு தொடர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் சென்னை அணி மேலும் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டியிருக்கிறது. சென்னை அணி ப்ளேஆஃபுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிக குறைந்த அளவில் இருக்கும் நிலையில், ப்ளே ஆஃபுக்குள் செல்லும் வாய்ப்பை எப்படியாவது பெற வேண்டும் என்று ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.