சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தொற்று குறைந்ததால் இந்த ஆண்டு அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இதில் பல்வேறு கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களில் அந்த பகுதியை சேர்ந்த மூத்தோர்கள் பாரம்பரிய அம்மன் சாமியாட்டம் ஆடுவார்கள். பறை மேளம் முழங்க அம்மன் ஆட்டத்தை ஆடி மக்களை மகிழ்விப்பார்கள்.
திருவிழாவின் போது இந்த சாமியாட்டம் ஆடுவது, இயற்கையை வழிபாடும் முறையாகும் என்றும் இதனால், மாதம் மும்மாரி மழை பெய்யும் என்பதும் ஐதீகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், கிராமம் செழிக்க வேண்டி, பாரம்பரியம் மற்றும் பழமை மாறாமல் அம்மன் ஆட்டங்களை ஆடுகின்றனர். மேலும், இந்த பாரம்பரியம் முன்னோர்களுடம் மறைந்துவிடாமல், அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் வகையில் தற்போதைய இளைஞர்களுக்கும் கற்று கொடுத்து வருகின்றனர். இதில், படித்த இளைஞர்கள் உட்பட அனைத்து ஆண்களும் கலந்து கொண்டு சாமி ஆட்டம் ஆடுவதை பயிற்சி எடுத்து கொண்டு வருகின்றனர். இதேபோன்று ஓமலூர் அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் பெரியமாரியம்மன் பண்டிகை கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இந்த கோவில் திருவிழா புதன் மற்றும் வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் நடைபெறுகிறது. இதற்காக பூச்சாட்டுதல் தொடங்கியதிலிருந்து தினமும் சுவாமிக்கு அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், இரவு நேரங்களில் கோவில் வளாகத்தில் பாரம்பரிய அம்மன் ஆட்டம் ஆடப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற அம்மன் ஆட்டங்களை வெகுவிமர்சையாக ஆடி வந்தனர். சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் இதுபோன்ற அம்மன் ஆட்டம் ஆடுவது குறைய தொடங்கியது. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழாக்கள் நடத்தாமல் இருந்து வந்ததும் இளைஞர்கள் மத்தியில் இந்த ஆட்டங்கள் மறந்துபோய் விட்டது. இந்த நிலையில், பட்டப்படிப்பு படித்த இளைஞர்களும் கிராமத்தின் பழமை மாறாமல் இருக்க, அம்மன் ஆட்டங்களை தொடர்ந்து கற்றுக்கொண்டு ஆடி வருகின்றனர். இதனால், இந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் அம்மன் ஆட்டம் ஆடுவதை பார்த்த மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து இரவு நேரங்களில் இரண்டு மணி நேரம் அம்மன் ஆட்டங்களை அடி, அம்மனுக்கு நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் திருவிழா என்பதால் கிராம மக்கள் மட்டுமின்றி பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் வருகை தந்திருந்தனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.