இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் தொடர் ரத்தானதற்கு ஐ.பி.எல். போட்டிகள் அறிவிக்கப்பட்டதுதான் காரணம் என்று பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்.
அவர் தனது ட்வீட்டில், ‘என்னுடைய பல் விழுந்துவிட்டது. இதற்கும் ஐ.பி.எல். தான் காரணமா?’ எனக் கலாய்க்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார்.
தொடரும் கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் நடைபெற்றுவந்த ஐ.பி.எல்., தொடர் பின்னர் தேதி தள்ளிவைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்று அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மேலதிகமாகவும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போட்டிக்கான வீரர்கள் பற்றாக்குறை காரணமாக மான்செஸ்டரில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் க்ரிகெட் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து சிலர் ஐபிஎல் காரணமாகத்தான் போட்டி நிறுத்தப்பட்டதாகக் கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான் இர்ஃபான் பதான் ட்வீட் செய்திருந்தார்.
முன்னதாக, இந்தியா - இங்கிலாந்து அணிகள் பங்கேற்ற டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டி செப்டம்பர் 10-ம் தேதி மேன்சஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது. இந்திய அணி பயிற்சியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வீரர்களின் பாதுகாப்பு கருதி நடைபெற இருந்த 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. போட்டி ரத்து செய்ததை ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுகள் இணைந்து இந்த முடிவை எட்டியுள்ளதாக ஐசிசி அறிவித்தது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரை அடுத்து, செப்டம்பர் 19-ம் தேதி ஐபிஎல் தொடர் இரண்டாம் கட்ட போட்டிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த 3 வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ, பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன் மலான், டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆல்-ரவுண்டர் வோக்ஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.