டெல்லியில் நடைபெற்று வரும் மகளிர் பிரிமியர் லீக்கில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் இறுதிப்போட்டியில் மோதி வருகின்றனர். டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி அணி ஷபாலி வர்மா அதிரடியில் பவர்ப்ளேவில் ரன்களை குவித்தது. ஆனால், மொலினிக்ஸ் சுழலில் ஒரே ஓவரில் ஷபாலி வர்மா, ஜெமிமா, கேப்ஸி அவுட்டானார்கள். மொலினிக்ஸ், ஸ்ரேயங்கா சுழலில் அவுட்டாகி 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


இதையடுத்து, 114 ரன்கள் எடுத்தால் மகுடம் சூடலாம் என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. பெங்களூர் அணிக்காக சோபி டிவைன் – கேப்டன் ஸ்மிரிதி மந்தனா களமிறங்கினர். இருவரும் இணைந்து நிதானமாகவும், அதேசமயம் அதிரடியாகவும் ஆடினர். சோபி டிவைன் அதிரடியாக ஆடினார். சிறப்பாக ஆடிய சோபி டிவைன் 27 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஷிகா பாண்டே பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். அடுத்து ஸ்மிரிதி மந்தனா – எல்லீஸ் பெர்ரி ஜோடி சேர்ந்தனர்.


இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடினர். டெல்லி அணியினரும் கட்டுக்கோப்பாக பந்துவீச முயற்சித்தனர். இதையடுத்து, ரன் வேகத்தை இருவரும் துரிதப்படுத்தினர். 12 ஓவர்களில் 61 ரன்களை பெங்களூர் எடுத்தது. இதையடுத்து, மந்தனாவும், பெர்ரியும் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விளாசினர். கடைசி 42 பந்துகளில் 42 ரன்கள் பெங்களூருக்கு தேவைப்பட்டது. மைதானத்தில் சுழல் எடுபடும் என்பதால் இருவரும் தேவையற்ற ஷாட்களை தவிர்த்தனர்.


நீண்ட நேரமாக நிதானமாக ஆடி வந்த மந்தனா அதிரடியாக ஆட முயற்சித்து 39 பந்துகளில் 3 பவுண்டரி 31 ரன்கள் எடுத்து மின்னுமணி பந்தில் அவுட்டானார். இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி 5 ஓவர்களில் பெங்களூர் வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. ரிச்சா கோஷ் எல்லீஸ் பெர்ரியுடன் ஜோடி சேர்ந்தார். ரிச்சா கோஷ் விறுவிறுவென ரன்களை சேர்க்கத் தொடங்கினார்.


கடைசி 6 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற சூழல் ஏற்பட்டது. இதனால், கடைசி ஓவரில் திரில் ஏற்பட்டது. முதல் பந்தில் ரிச்சா ஒரு ரன்களை எடுத்தார். இரண்டாவது பந்தில் பெர்ரி ஒரு ரன் எடுத்தார். 3வது பந்தில் ரிச்சா பவுண்டரி அடித்துவெற்றியைத் தேடித்தந்தார்.


ரிச்சா கோஷ் 14 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எல்லீஸ் பெர்ரி 37 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.


ஆடவர் ஆர்.சி.பி. அணி 17 ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரில் ஆடி வரும் சூழலில் ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை. இந்த சூழலில், மகளிரணி 2வது சீசனிலே சாம்பியன் பட்டம் வென்றது ஆர்.சி.பி. ரசிகர்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.