WPL 2024:


ஆடவர்களுக்கு நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரை போல் WPL தொடர் கடந்த ஆண்டு முதல் மகளிருக்கும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் மூலம் இந்தியாவில் நிறைய இளம் வீரர்கள் உருவாகி வருகின்றனர். முதலில் தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளைப் போலவே தற்போது மகளிருக்கு நடத்தப்படும் ”மகளிர் பிரிமியர் லீக்” போட்டிகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 


இந்நிலையில், நேற்று (டிசம்பர் 10) WPL 2024 தொடருக்கான மினி ஏலம் நடைபெற்றது. அதில், சர்வதேச போட்டிகளில் இன்னும் அறிமுகம் ஆகாத இந்திய வீராங்கனை காஷ்வி கவுதம் 2 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார்.


இதனிடையே, நேற்று அடிப்படை விலையான பத்து லட்ச ரூபாய்க்கு தமிழகத்தைச் சேர்ந்த 23 வயதான லெக் ஸ்பின் ஆல் ரவுண்டர் கீர்த்தனா பாலகிருஷ்ணனை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதனிடையே யார் இவர் என்ற தேடல் இணையத்தில் அதிகரித்தது. 






யார் இந்த கீர்த்தனா பாலகிருஷ்ணன்?


சென்னையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி 2000 ஆம் ஆண்டு பிறந்தவர் கீர்த்தனா. தற்போது 23 வயது ஆகும் இவர் இதுவரை தமிழக அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.


அதில் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். 2021-22 பிரேயர் கோப்பையில், 34 என்ற சராசரி மற்றும் 86 ஸ்ட்ரைக் ரேட்டில் 102 ரன்கள் எடுத்துள்ளார்


பேட்டிங்கில் லோயர் மிடில் ஆர்டரில் விளையாடக்கூடியவர்.


இவரது தந்தை சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுனராக இருந்து வருகிறார். தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் தந்தையான டிஎஸ் முகுந்த் கிரிக்கெட் அகாடமியில் கீர்த்தனா பாலகிருஷ்ணன் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்ஸி ட்ரைவரின் மகளாக பிறந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருக்கும் இவரை பல்வேறு தரப்பினரும் வாழ்த்தி வருகின்றனர்.






இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தன்னுடைய வாழ்த்தை பதிவு செய்துள்ளார். மேலும், சமூகத்தில் கீழ்மட்டத்தில் உள்ள பல கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து ஒரு பைசா கூட வசூலிக்காமல் கிரிக்கெட் பயிற்சி அளித்து வரும் டிஎஸ் முகுந்த் கிரிக்கெட் அகாடமியையும் பாராட்டியுள்ளார்.