நம்முடைய 14 வயதில் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம்? நினைவு இருக்கிறதா?
ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் களமிறங்கிய 14 வயதுச் சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சூறாவளியாய் பந்துகளைப் பந்தாடி அதிவேக சதத்தை எட்டி உள்ளார்.
குறிப்பாக ஐபிஎல்லில் மிக இளம் வயதில் என்ட்ரி கொடுத்து, தனது முதல் ஆட்டத்தில் முதல் பந்திலேயே சிக்ஸ்ரை விளாசினார். லக்னோவுக்கு எதிராக 20 பந்துகளுக்கு 34 ரன்களை எடுத்தார். குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில், 11 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் விளாசி, 35 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 11 சிக்சர்களில் 2, 90 மீட்டரைக் கடந்து பாய்ந்தன. 3 சிக்சர்கள் 85 மீட்டரைத் தாண்டிப் பறந்தன. சில சிக்ஸர்கள், ஸ்டேடியத்தில் இருந்த ஸ்டாண்ட் கூரைகளில் சென்று அமர்ந்தன.
இளம் வயதில் படைத்த சாதனைகள்
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் சதம் விளாசிய வீரர் (14 வருடம், 32 நாட்கள்), ஐபிஎல் வரலாற்றின் இரண்டாவது அதிவேக சதம் விளாசிய வீரர், இந்திய பேட்ஸ்மேன்களில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் போன்ற சாதனைகளைப் படைத்துள்ளார் சூர்யவன்ஷி.
இதை அடுத்து, உங்களின் 14 வயதில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்னும் கேள்வி இணையத்தில் பரவலாகக் கேட்கப்பட்டு வருகிறது.
நம்பிக்கையைக் காப்பாற்றிய சூர்யவன்ஷி
ஐபிஎல் அணிக்கான மிக இளம் வயதிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் சூர்யவன்ஷி. அவருடைய 13 வயதில் 1.1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
மைதானத்தில் சிக்சர் மழை பொழிந்த வைபவ் சூர்யவன்ஷி பிறந்தது 2011ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி. பிஹாரின் தாஜ்பூரில் பிறந்தார் சூர்யவன்ஷி. எல்லாக் குழந்தைகளும் ஓடவும் தெளிவாகப் பேசவும் ஆரம்பிக்கும் 4 வயதில், கிரிக்கெட் ஆடத் தொடங்கினார்.
அவரின் அப்பாவே கிரிக்கெட் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். தொடர்ந்து 9ஆம் வயதில், சமஸ்திர்பூரில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். பிஹாரில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான வினோ மன்கட் ட்ராபியில் விளையாடியபோது சூர்யவன்ஷிக்கு வயது 12.
யுவராஜ் சிங்கின் சாதனை முறியடிப்பு
பிஹாருக்காக இளம் வயதில் வைபவ் சூர்யவன்ஷி ரஞ்சி ட்ராபியில் விளையாடினார். இதன்மூலம் யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்தார்.
8ஆம் வகுப்பு மாணவன்
தாஜ்பூரில் உள்ள டாக்டர் முக்தேஷ்வர் சின்ஹா மாடஸ்டி பள்ளியில், 8ஆம் வகுப்பு மாணவன் வைபவ் சூர்யவன்ஷி.
வைபவின் பயிற்சி குறித்து அவரின் இளம் வயது (!) பயிற்சியாளர் மணிஷ் ஓஜா கூறும்போது, எது சொன்னாலும் உடனே கிரஹித்துக் கொள்வது சூர்யவன்ஷியின் வழக்கம். பயிற்சி, நுட்பம் குறித்து எதையுமே அவருக்கு இரண்டாம் முறை சொன்னதில்லை.
இந்த பையன் அசாதாரணமானவன்
ஆரம்ப காலத்தில் தினந்தோறும் 350 முதல் 400 பந்துகளை சூர்யவன்ஷி எதிர்கொள்வார். கடுமையாகப் பயிற்சி எடுத்த சூர்யவன்ஷிக்கு மட்டுமல்லாது அவருக்கு பந்து வீசுபவர்களுக்கும் அவரின் தந்தை கூடுதலாக உணவு எடுத்து வருவார்.
2022-ல் என்னுடைய ஓஜா அகாடமி சார்பாக ஓர் ஆட்டத்தை நடத்தினோம். அதில் 114 ரன்களை சூர்யவன்ஷி எடுத்திருந்தார். அவரின் சக்தி, நேரம், துல்லியம் எல்லாம் விதிவிலக்காக இருந்தது. அந்த தருணத்திலிருந்து, ’இந்த பையன் அசாதாரணமானவன்’ என உணர்ந்தேன்’’ என்று தெரிவித்துள்ளார்.