Vaibhav Suryavanshi: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அபரிவிதமான பல சாதனைகளை படைத்துள்ளார்.

நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி:

ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நேற்று நடந்த லீக் போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் கேப்டன் கில் மற்றும் பட்லரின் அதிரடியான அரைசதத்தால் 209 ரன்களை குவித்தது. தொடர் தோல்விகளால் திணறி வந்த ராஜஸ்தான், இந்த இமாலய இலக்கை எட்டிப்பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தொடக்க வீரர்களாக களமிறங்கிய 14 வயதே ஆன சூர்யவன்ஷி, ஜெய்ஷ்வால் உடன் இணைந்து குஜராத் அணியுன் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவருக்கு பக்கபலமாக ஜெய்ஷ்வாலும் நிலைத்து நின்று ரன் குவித்தார். இந்த ஜோடியை பிடிக்க முடியாமல் குஜராத் அணி திணறியது.

இளம் வீரரின் சாதனை சதம்:

மைதானத்தில் சிக்சர் மழை பொழிந்த சூர்யவன்ஷி, 35 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்ய, ஒட்டுமொத்த மைதானமே எழுந்து நின்று அவரை பாராட்டியது. இதில் 11 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும். முதல் விக்கெட்டிற்கு மட்டும் இந்த கூட்டணி 65 பந்துகளில் 166 ரன்களை விளாச, 101 ரன்கள் எடுத்தபோது சூர்யவன்ஷி ஆட்டமிழந்தார். இதன் மூலம்,

  • ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் சதம் விளாசிய வீரர் (14 வருடம் 32 நாட்கள்)
  • ஐபிஎல் வரலாற்றின் இரண்டாவது அதிவேக சதம் விளாசிய வீரர்
  • இந்திய பேட்ஸ்மேன்களில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் போன்ற சாதனைகளை தன்வசம் ஆக்கினார். ரசிகர்கள் மிகவும் கொண்டாடிய அட்டகாசமான, என்றும் மறக்கமுடியாத ஆட்டங்களில் ஒன்றாகவும் இது மாறியுள்ளது.

இதன் விளைவாக 15.5 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணி இலக்கை எட்டி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ஷ்வால் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 70 ரன்களும், கேப்டன் பராக் 32 ரன்களும் விளாசினர். நடப்பு தொடரில் ராஜஸ்தான் பதிவு செய்த 3வது வெற்றி இதுவாகும். சூர்யவன்ஷியின் அபார ஆட்டத்திற்கு, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிவேகமாக சதம் விளாசிய வீரர்கள்:

  • க்றிஸ் கெயில் - 30 பந்துகள்
  • வைபவ் சூர்யவன்ஷி - 35 பந்துகள்
  • யூசஃப் பதான் - 37 பந்துகள்
  • டேவிட் மில்லர் - 38 பந்துகள்
  • ட்ராவிஸ் ஜெட் - 39 பந்துகள்

இளம் வயதில் டி20 சதம் விளாசிய வீரர்கள்:

  • 14 வருடம் & 32 நாட்கள் - வைபவ் சூர்யவன்ஷி (ஆர்ஆர்) எதிராக குஜராத் டைட்டன்ஸ் - 2024
  • 18 மற்றும் 118 நாட்கள் - விஜய் சோல் (மகாராஷ்டிரா) எதிராக மும்பை - 2013
  • 18 வருடம் & 179 நாட்கள் - பர்வேஸ் ஹொசைன் எமன் (பாரிஷால்) எதிராக ராஜ்ஷாஹி - 2020
  • 187 & 280 நாட்கள் - குஸ்டாவ் மெக்கீன் (பிரான்ஸ்) vs சுவிட்சர்லாந்து - 2022

ஐபிஎல் 2025 - புள்ளிப்பட்டியல்:

அணி போட்டி வெற்றி தோல்வி சமன் ரன்ரேட் புள்ளிகள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 10 7 3 0 0.521 14
மும்பை இந்தியன்ஸ் 10 6 4 0 0.889 12
குஜராத் டைட்டன்ஸ் 9 6 3 0 0.75 12
டெல்லி கேபிடல்ஸ் 9 6 3 0 0.482 12
பஞ்சாப் கிங்ஸ் 9 5 3 1 0.177 11
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 10 5 5 0 -0.325 10
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 3 5 1 0.212 7
ராஜஸ்தான் ராயல்ஸ் 10 3 7 0 -0.349 6
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 9 3 6 0 0-1.103 6
சென்னை சூப்பர் கிங்ஸ் 9 2 7 0 -1.302  4

குஷியில் பல்தான்ஸ்:

மிகப்பெரிய இலக்கை வெறும் 15.5 ஓவர்களில் விட்டுக் கொடுத்ததால் குஜராத் அணியின் ரன்ரேட் 1.10-லிருந்து, 0.75 ஆக சரிந்துள்ளது. இதன் காரணமாக ரன் ரேட் அடிப்படிடையில், புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேநேரம், குஜராத் அணி மூன்றாவது இடத்திற்கு சரிய, ராஜஸ்தான் அணி 8வது இடத்திர்கு முன்னேறியுள்ளது. இதனிடையே, இன்று நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறக்கூடும்.