Who is Ashwani Kumar: ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு இந்திய பந்துவீச்சாளரும் நிகழ்த்தாத சாதனையை அஸ்வனி குமார் நிகழ்த்தியுள்ளார்.

கொல்கத்தாவை பார்சல் கட்டிய அஸ்வனி குமார்:

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நேற்றைய போட்டியில் களமிறங்கிய, 23 வயதான அஸ்வனி குமார் தனது முதல் போட்டியிலேயே ஐபிஎல் வரலாற்றில் தடம் பதித்துள்ளார். அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே, கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானேவை ஆட்டமிழக்கச் செய்தார். அவரை தொடர்ந்து, ரிங்கு சிங், மனிஷ் பாண்டே மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி, வான்கடே மைதானத்தின் கரகோஷங்களில் மூழ்கினார். ஐபிஎல் அறிமுகப் போட்டியில் ஒரு இந்திய பந்து வீச்சாளர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது இதுவே முதல் முறை ஆகும். அவரது அபாரமான செயல்பாட்டால் மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

அதோடு, மும்பை அணியின் முதல் போட்டியில் களமிறங்கிய விக்னேஷ் புதூர் பெரிதும் கவனம் ஈர்த்தார். அவரை தொடர்ந்து அந்த அணியை சேர்ந்த மற்றொரு இளம் வீரரான அஸ்வனி குமாரும் ஈர்த்துள்ளார்.

யார் இந்த அஸ்வனி குமார்?

மொகாலியில் பிறந்த அஸ்வானி, ஷெர்-இ-பஞ்சாப் டி20 போட்டியில் தனது சிறந்த ஆட்டத்தால் தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்தார். இந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் டெத் ஓவர்களில் பந்து வீசுவதில் கைதேர்ந்தவராக அறியப்படுகிறார். ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.30 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். 2024 ஆம் ஆண்டில், அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரு பகுதியாக இருந்தார், ஆனால் அந்த அணிக்காக ஒரு ஆட்டத்தில் கூட களமிறங்கவில்லை.

2022 ஆம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி டிராபியில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமான அவர், நான்கு போட்டிகளில் விளையாடி 8.5 என்ற எகானமியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் பஞ்சாப் அணிக்காக இரண்டு முதல் தர போட்டிகளிலும், நான்கு லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் போட்டிகளில் கூட பெரிய அனுபவம் இல்லாவிட்டாலும், அவரது யார்க்கர் வீசும் திறனால் ஈர்க்கப்பட்ட மும்பை அணி, அஸ்வனியை ஏலத்தில் எடுத்தது.

ஐபிஎல் அறிமுக போட்டியில் இந்தியரின் சிறந்த பந்துவீச்சு:

  • 4/24 - அஸ்வனி குமார் (மும்பை இந்தியன்ஸ்) vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை, 2025
  • 3/9 - அமித் சிங் (ராஜஸ்தான் ராயல்ஸ்) vs பஞ்சாப் கிங்ஸ், டர்பன், 2009
  • 3/20 - வைஷாக் விஜய்குமார் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) vs டெல்லி கேபிடல்ஸ், பெங்களூரு, 2023

ஐபிஎல் அறிமுக போட்டியில் சிறந்த பந்துவீச்சு:

  • 6/12 - அல்சாரி ஜோசப் (MI) vs SRH, ஐதராபாத், 2019
  • 5/17 - ஆண்ட்ரூ டை (GL) vs RPS, ராஜ்கோட், 2017
  • 4/11 - சோயிப் அக்தர் (கேகேஆர்) vs டிசி, கொல்கத்தா, 2008

அஸ்வனி குமார் மகிழ்ச்சி

அறிமுக போட்டி குறித்து பேசிய அஸ்வனி குமார், “இது ஒரு அற்புதமான உணர்வு. நிறைய அழுத்தம் இருந்தது. ஆனால் அணி சூழல் எப்படி இருக்கிறதோ, அது நன்றாகவே சென்றது. ஆட்டத்திற்கு முன்பு அதிக பதட்டங்கள் இருந்தன. நான் நிறைய திட்டமிட்டேன்.  இது உங்கள் அறிமுக ஆட்டம், களத்திற்கு சென்று நீங்கள் எப்போதும் வீசுவது போல் பந்து வீசுங்கள் என மூத்த வீரர்கள் சொன்னார்கள். அதையே செய்தேன் பலன் கிடைத்தது. என் கிராமத்தில் உள்ள அனைவரும் இதனை பார்த்துக் கொண்டிருப்பார்கள், ஆட்டம் முடிந்ததும் நான் அவர்களிடம் பேசுவேன்” என தெரிவித்தார்.