ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஹரியானவை சேர்ந்த அன்ஷுல் கம்போஜை 3.40 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல சர்ப்ரைஸ் கொடுத்து வீரர்களை எடுத்து வருகிறது. நேற்றைய ஏலத்தில்(24.11.2025) அதிகபட்சமாக நூர் அகமத்தை சென்னை அணி 10 கோடிக்கும், தமிழக வீரர் ரவி அஷ்வினை 9.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதில் கலீல் அகமத்தை 4.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ரச்சின் ரவீந்திராவை 4 கோடிக்கும், டேவன் கான்வேயை 6.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
அனல் பறந்த இரண்டாம் நாள் ஏலம்:
இன்றைய இரண்டாம் நாள் ஏலத்தின் தொடக்கத்தில் சென்னை சாம் கரணை 2.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அதே போல தீபக் ஹூடா, முகேஷ் சவுத்ரி, ஷேக் ரசீத் போன்ற வீரர்களை சட சட என சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் ஒரு நல்ல இந்திய வேகப்பந்து வீச்சாளரை சிஎஸ்கே அணிக்கு தேவைப்பட்ட போது தான் ஹரியானா எக்ஸ்பிரஸ் அன்ஷுல் கம்போஜை மும்பை இந்தியன்ஸ் அணியுடம் போட்டி போட்டு இறுதியில் அன்ஷூல் கம்போஜை 3.4 கோடிக்கு எடுத்தது.
இதையும் படிங்க: IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
யார் இந்த அன்ஷூல் கம்போஜ்?
உள்நாட்டு கிரிக்கெட்டில் ஹரியானா அணிக்காக விளையாடி வரும், அன்ஷுல் இந்தியா ஏ மற்றும் இந்தியா அண்டர்-19 அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு நடந்த ரஞ்சி போட்டியில் கேரளாவுக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம் இவரது புகழ் பட்டித்தொட்டி எங்கும் பரவியது. கேரளாவுக்கு எதிராக 49 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 1985-86 சீசனுக்குப் பிறகு ரஞ்சி டிராபியில் ஒரு இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை கம்போஜ் பெற்றார்.
ஒட்டுமொத்தமாக, காம்போஜ் இதுவரை 19 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அவர் 368 ரன்கள் குவித்து 57 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டி20யில் 16 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. அன்ஷுல் தனது முதல் சீசனில் 3 ஆட்டங்களில் விளையாடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.