ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான சிறப்பான பந்துவீச்சால், மும்பை அணியின் ஆகாஷ் மத்வால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


மும்பை அணி அபாரம்:


நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற, எலிமினேட்டர் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதின. முதலில் விளையாடிய மும்பை அணி 182 ரன்களை குவிக்க, இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி 101 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. மும்பை அணியின் 81 ரன்கள் வித்தியாசத்திலான இந்த அபார வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் மத்வால்.


சாதனை பட்டியலில் இணைந்த மத்வால்:


மும்பையின் மற்ற வீரர்கள் ரன்களை விட்டுக்கொடுக்க கூடாது என்ற நோக்கில் பந்துவீசிக்கொண்டிருக்க, ஆகாஷ் மத்வால் மட்டும் வீசிய ஓவர்களில் எல்லாம் விக்கெட்டுகளை எடுத்தார். மன்கட், பதோனி, பூரான், பிஷ்னோய் மற்றும் மொஹ்சின் கான் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில், 3.3 ஓவர்களில் வெறும் 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் மிகக்குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளேவின் சாதனையை மத்வால் சமன் செய்துள்ளார். முன்னதாக, கடந்த 2009ம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக, கும்ப்ளே வெறும் 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 


”நான் ஒரு இன்ஜினியர்”


29 வயதான பொறியியல் பட்டதாரியான ஆகாஷ் மத்வால், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை டென்னிஸ் பந்தில் மட்டுமே கிரிக்கெட் விளையாடி வந்தவர் ஆவார். ஒருமுறை கூட ரெட் பாலில் விளையாடாத அவரது வாழ்க்கையையே மாற்றி அமைத்தவர் வாசிம் ஜாபர் தான். இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான ரீஷப் பண்ட் பிறந்து வளர்ந்த உத்தரகாண்டில் உள்ள ரூர்கி பகுதியை சேர்ந்தவர் தான் ஆகாஷ் மத்வால். ரிஷப் பண்டிற்கு இளம் வயதில் பயிற்சி அளித்த அவதார் சிங் தான், மத்வாலிற்கும் பயிற்சி அளித்தார். அவரது திறமையை கண்டு வியந்த உத்தரகாண்ட் கிரிக்கெட் அணியின் அப்போதைய பயிற்சியாளர் வாசிம் ஜாபரும், இப்போதைய பயிற்சியாளரான மணீஷ் ஜாவும் சேர்ந்து, மத்வாலுக்கு ரெட் பாலில் பயிற்சி அளிக்க தொடங்கினர். 


உள்ளூர் போட்டிகளில் அசத்தல்:


தொடர்ந்து 2019ம் ஆண்டு உள்ளூர் போட்டிகளில் உத்தரகாண்ட் அணிக்காக களமிறங்கிய மத்வால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை சரித்தார். இதனால், அண்மையில் அவர் உத்தரகாண்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இதனிடையே, கடந்த 2021ம் ஆண்டு பெங்களூரு அணியில் நெட் பவுலராக இருந்தார். 2022ம் ஆண்டில் அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.


மும்பை அணியில் இணைந்த மத்வால்:


இதனிடையே, காயம் காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக, மத்வால் மும்பை அணியில் இணைந்தார். வெறும் 20 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அவர், அதே விலைக்கு ஏலத்திற்கு முன்பாக தக்கவைக்கப்பட்டார். இந்த நிலையில் தான், காயம் காரணமாக பும்ரா மற்றும் ஆர்ச்சர் போன்ற மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் நடப்பு தொடரிலிருந்து விலகிய நிலையில், அவர்களின் இடத்தை கணக்கச்சிதமாக நிரப்பியுள்ளார் ஆகாஷ் மத்வால்.


மத்வால் சொன்னது என்ன?


நேற்றைய போட்டிக்கு பிறகு பேசிய மத்வால் “நான் பயிற்சி செய்து கொண்டிருந்தேன், இந்த வாய்ப்புக்காக காத்திருந்தேன். நான் இன்ஜினியரிங் படித்தேன், ஆனால் எனக்கு இருந்த ஆர்வம் காரணமாக டென்னிஸ்-பால் கிரிக்கெட் விளையாடினேன். இன்ஜினியர்களுக்கு விரைந்து கற்றுக் கொள்ளும் திறன் உள்ளது! நான் பயிற்சி செய்கிறேன், அதைத்தான் நாங்கள் செயல்படுத்தினோம். நான் என்னைப் பற்றி பெருமைப்படுகிறேன், ஆனால் நான் சிறப்பாக இருக்க முயற்சிப்பேன். பும்ராவிற்கென்று அணியில் தனி இடம் உண்டு, நான் எனக்கான வேலையை செய்கிறேன்” என கூறினார்.


ரோகித் பாராட்டு:


மத்வால் குறித்து பேசிய மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, ”கடந்தாண்டு நெட் பவுலர்களில் ஒருவராக மத்வால் இருந்தார். அணிக்கு தேவையானதை செய்யக்கூடிய திறமை அவருக்கு உள்ளதை நாங்கள் அறிவோம். அதனால் தான் ஆர்ச்சர் தொடரிலிருந்து விலகியுதுமே, அவரை அணியில் சேர்த்தோம். பல ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து பல வீரர்கள் வந்து இந்தியாவுக்காக விளையாடுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம்” என குறிப்பிட்டார். இதனால், மத்வாலும் அந்த அணியில் விளையாடக்கூடும் என மறைமுகமாக ரோகித் தெரிவித்துள்ளார்.