ஐபிஎல் 2022 போட்டியில் நேற்றைய சி.எஸ்.கே. மற்றும் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி விக்கெட்டை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவிய முகேஷ் செளத்ரி, ஃபீல்டிங்கில் சற்று சொதப்பினார். ஆனால், முகேஷ் செளத்ரியை களத்தில் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி அறிவுரை கூறி தேற்றும் செயலை இண்டர்நெட்டில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.






மகாராஷ்டிராவைச் சேர்ந்த 25 வயதான முகேஷ் செளத்ரி, நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக ஃபீல்டிங் செய்யவில்லை. 3 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்தார். விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியது மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்த ஒன்று.






பெங்களூர் வீரர் சுயாஸ் பிரபு தேசாய் 18 பந்துகளில் 34 ரன்களை எடுத்து தனது ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அப்போது 14வது ஓவரில் பிராவோ வீசிய பந்தை அவர் தூக்கி அடிக்க அது ஃபீல்டரிடம் சென்றது. அனைவருமே விக்கெட் என்று எதிர்பார்த்திருந்த சமயத்தில்,  மிட் விக்கெட்டில் ஃபீல்டராக இருந்த முகேஷ், மிகவும் சுலபமாக வந்த அந்த கேட்ச்-ஐ தவறவிட்டார். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். மேலும், இந்த கேட்சை முகேஷ் பிடித்திருந்தால் ஆட்டம் மாறியிருக்கக் கூடும். 






ஆனால் 15வது ஓவரில் அதிரடியாக ஆடி வந்த தினேஷ் கார்த்திக் கொடுத்த அழகான கேட்சையும் முகேஷ் சொத்ரி தவறவிட்டார். அப்போது, போட்டி பெங்களூரு அணி வெற்றி பெற சாதகமாக இருந்த தருணத்தில், முகேஷின் இந்தச் செயல் விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த கேட்ச்சால் ஆட்டமே மாறப்போயிருக்கும். இந்த கேட்சால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றிருக்க வாய்ப்பிருந்தது. ஆனால்,  இறுதியில் தீக்‌ஷணாவின் சுழலில் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். ரசிகர்கள் இதனை கொண்டாடினர். ஆனால், இதைவிட களத்தில் நடந்த நெகிழ்ச்சியான தருணத்தை சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கள் கொண்டாடுவது வைரலாகி வருகிறது.






தினேஷ் கார்த்திக் விக்கெட்டை கொண்டாடுவதை விட்டுவிட்டு, சென்னை சூப்பர் கிங்க்ஸின் முன்னாள் கேட்பனும், விக்கெட் கீப்பர் தோனி, நடந்து சென்று முகேஷ் செளத்ரியின் தோளில் கைப்போட்டு கொண்டு அவரிடம் பேசியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.






நேற்றைய நாள் முகேஷ் செளத்ரிக்கு மோசமான நாளாக இருந்தது. ஆனாலும், தோனி அவரை ஆறுதல்படுத்தி அறிவுரை கூறிய விதத்தை, ரசிகர்கள், ’இதுதான் கேப்டன் தோனி!’ ’கேப்டன் தோனியின் குணம் இதுதான்.’ என்று பாராட்டி வருகின்றனர்.