இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சுப்மன் கில்லை, நட்சத்திர வீரரான கோலி பாராட்டி இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
விராட் கோலி பதிவு:
ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சுப்மன்கில், அதிரடியாக விளையாடி தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இதனை பாராட்டி கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அங்கே திறமையும் உள்ளது. கில்லும் இருக்கிறார். செல்லுங்கள், சென்று அடுத்த தலைமுறையை வழிநடத்துங்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் சுப்மன் கில்” என ஒரு நட்சத்திரத்தையும் குறிப்பிட்டுள்ளார் . ஏற்கனவே இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டபோதும், ” இந்திய அணியின் வருங்காலம் சுப்மன் கில் தான்” என பொருள்படும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கில் நெகிழ்ச்சி பதிவு:
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், கில் மட்டும் நிலைத்து நின்று தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், 58 பந்துகளில் 101 ரன்களை குவித்தார். இதில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் எனக்கு 12 - 13 வயதிருந்த போதிலிருந்தே விராட் கோலி அண்ணாவை தான் பின் தொடர்ந்து வருகிறேன். கிரிக்கெட்டை புரிந்துகொள்ள தொடங்கியதிலிருந்தே அவர் தான் எனக்கு முன்மாதிரி. சச்சின் டெண்டுல்கர் மற்றும் கோலி ஆகிய இருவருமே என்னை ஊக்கப்படுத்தி, முன்மாதிரியாக உள்ளனர் எனவும் சுப்மன் கில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த சூழலில் தான் கில்லை பாராட்டி, விராட் கோலியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, விராட் கோலியுடன் சேர்ந்து, இளம் வயதில் சுப்மன் கில் எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது.
ஐபிஎல் தொடரில் அசத்தல்:
கடந்தாண்டு ஐபிஎல் தொடரை காட்டிலும் நடப்பு தொடரில் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த தொடரில் மொத்தமாகவே 16 போட்டிகளில் விளையாடி 483 ரன்களை மட்டுமே சேர்த்து இருந்தார். ஆனால், நடப்பு தொடரில் இதுவரை 13 போட்டிகளிலேயே 576 ரன்களை குவித்துள்ளார். இதில் 4 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும். இதன் மூலம், அதிக ரன்கள் அடித்தவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பிக்கான பட்டியலில், இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் பெங்களூரு அணி கேப்டன் டூப்ளெசிஸ் 631 ரன்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.