ந்தியன் பிரீமியர் லீக் 2026 தொடரில் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு புதிய அவதாரத்தை எடுத்துள்ளார். தனது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல்முறையாக அவர் இன்று 'இம்பாக்ட் பிளேயராக' அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடர் தொடங்கிய 2008ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி அணியின் தூணாக விளங்கும் 37 வயதான விராட் கோலி, இதுவரை ஒரு போட்டியில் கூட மாற்று வீரராக பெஞ்சில் அமர்ந்தது கிடையாது. கடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாகவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காயத்திலிருந்து மீண்டு வந்தாலும், அவரது பணிச்சுமையை குறைக்கவும் தற்காப்பு நடவடிக்கையாகவும் ஆர்சிபி நிர்வாகம் அவரை தொடக்க லெவனில் சேர்க்காமல் இம்பாக்ட் பிளேயர் பட்டியலில் வைத்துள்ளது.
நடப்பு சாம்பியனான ஆர்சிபி இந்த சீசனில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் வலுவான இடத்தில் உள்ளது. கிங் கோலி பேட்டிங்கில் மிகச்சிறந்த ஃபார்மில் இருப்பதால், இன்றைய போட்டியில் அவர் பீல்டிங் செய்ய மாட்டார் என்றும், ஆர்சிபி பேட்டிங் செய்யும் போது மட்டும் அதிரடி காட்ட களமிறக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
19 சீசன்களாக ஒரே அணிக்காக விளையாடி வரும் சாதனையாளர், முதல்முறையாக இம்பாக்ட் பிளேயராக களம் காண்பது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 2023இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விதிமுறை, ஒரு ஜாம்பவானை இப்படி பயன்படுத்துவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
