விராட் கோலி எப்போது கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என்ற கேள்வியை நாள்தோறும் கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர். விராட் கோலி கிரிக்கெட் விளையாடி நீண்ட காலம் ஆகிவிட்டது.  அவரது மகன் அகேயின் பிறப்பு காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான முழு டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி, தனது பெயரை வாபஸ் பெற்றார். அதன்பிறகு, மக்கள் பார்வையில் இருந்து குடும்பத்துடன் லண்டனில் வலம் வந்ததாக கூறப்பட்டது. 


இந்தநிலையில் விராட் கோலி ஐபிஎல் விளையாடுவாரா..? இல்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி விளையாடினால், கோலி எப்போது களத்திற்கு திரும்புவார்? என்றும் கேள்வி எழுந்தது. இதற்கெல்லாம் தற்போது பதில் கிடைத்துள்ளது. 






விராட் கோலி வருகின்ற மார்ச் 19ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பயிற்சி முகாமில் இணையலாம். ஏனெனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ‘அன்பாக்ஸ்’ நிகழ்ச்சி அன்றுதான் நடைபெறுகிறது. இதனால், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விராட் கோலி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோலி கடைசியாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றார். இதன்பிறகு, தனிப்பட்ட காரணங்களால் கிரிக்கெட் களத்தில் இருந்து ஒதுங்கிய அவர் லண்டன் தெருக்களில் காணப்பட்டதாக புகைப்படங்கள் வெளியாகியது.


மார்ச் 19ம் தேதி அணியுடனான நிகழ்ச்சியில் கோலி பங்கேற்பார் என்பது குறித்து ஆர்சிபி நிர்வாகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், ஐபிஎல் சீசன் 17ல் கோலி பங்கேற்பார் என்பது மட்டும் உறுதி.


ஐபிஎல் சீசன் 17 விராட் கோலிக்கு மிக முக்கியம்:


ஐபிஎல் 2024 விராட் கோலிக்கு மிக முக்கிய தேர்வாகும். இதில், சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வருகின்ற ஜூன் மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம், விராட் கோலி மெதுவான பிட்சுகளில் தனது விக்கெட்டை இழந்துவிடுவார் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டதாம். 


ஐபிஎல்லுக்குப் பிறகு, டி20 உலகக் கோப்பை 2024 விளையாட உள்ளது. இதில் கோலியின் தேர்வு குறித்து ஏற்கனவே கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து அவர் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இன்சைட் ஸ்போர்ட்ஸிடம் பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், "எங்களுக்குத் தெரிந்தவரை, விராட் கோலி ஐபிஎல் விளையாடுவார். ஆனால் அவர் எப்போது ஆர்சிபி அணியில் சேருவார் என்பது அவரையும் அவரது அணியையும் சார்ந்தது. நாங்கள் அதைப் பற்றி கேள்விப்படவில்லை" என தெரிவித்தார். 


டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர் விராட் கோலி:


டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் இந்திய வீரர் விராட் கோலி. இவர் 2012 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி வருகிறார். அது முதல் இப்போது வரை அவர் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார். இதுவரை 27 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 25 இன்னிங்ஸ்களில் 1141 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஆனால் அவர் 14 அரை சதங்களை அடித்துள்ளார்.