நடப்பு சீசனில் மட்டும் விராட் கோலி 500 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.


ஐ.பி.எல் சீசன் 17:



கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17.  அதன்படி இந்த சீசன் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்ரல் 28) 45 வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடி வருகின்றன.


முன்னதாக இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வியையும், 3 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. அந்தவகையில் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசி இடத்தில் இருந்தாலும் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறார். 


500 ரன்களை கடந்த முதல் வீரர்:


இந்நிலையில் தான் இந்த சீசனில் 500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி.  இதுவரை விராட் கோலி இந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அரைசதம் விளாசி உள்ளார். அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சதம் விளாசி உள்ளார். மொத்தம் 4 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் விளாசி உள்ளார் விராட் கோலி. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கடைசி வரை களத்தில் நின்ற அவர் 44 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 70 ரன்களை குவித்தார்.



முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 4 அரைசதங்கள் உட்பட 557 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 6 அரைசதங்கள் உட்பட மொத்தம் 634 ரன்களை குவித்திருக்கிறார். 2015 ஆம் ஆண்டு 505 ரன்களும், 2016 ஆம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 4 சதங்கள் மற்றும் 7 சதங்கள் உட்பட 973 ரன்களை குவித்து அசத்தி இருக்கிறார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 14 போட்டிகள் விளையாடிய விராட் 4 அரைசதங்கள் உட்பட மொத்தம் 530 ரன்கள் எடுத்துள்ளார்.


2019 ஆம் ஆண்டில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 2 அரைசதங்கள் உட்பட மொத்தம் 464 ரன்களும், 2020 ஆம் ஆண்டு 466 ரன்களையும் எடுத்திருக்கிறார் விராட் கோலி. அதேபோல், 2021 ஆம் ஆண்டில் 15 போட்டிகள் விளையாடிய அவர் 3 அரைசதங்கள் உட்பட மொத்தம் 405 ரன்களும், கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 14 போட்டிகளில்  விளையாடி 2 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் உட்பட மொத்தம் 639 ரன்களை குவித்து மாஸ் காட்டி இருக்கிறார் விராட் கோலி. இந்த சீசனிலும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி இந்த சீசனில் 500 ரன்களை கடந்து அசத்தி உள்ளார்.