மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் இரண்டாவது நாளான இன்று, முதல் ஆட்டம் மும்பையில் உள்ள பிரபோர்ன்ஸ் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. அதில், ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.


அசத்திய ஷெபாலி வர்மா, லேனிங் ஜோடி:


டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஷெபாலி வர்மா மற்றும் கேப்டன் மேக் லேனிங் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 


14 ஃபோர்களை பறக்கவிட்ட லேனிங், 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதேபோல, மறுமுனையில் பட்டையை கிளப்பிய ஷெபாலி வர்மா, 4 சிக்சர்களும் 10 ஃபோர்களும் அடித்து பெங்களூரு அணியை திணறடித்தார். இருப்பினும், சதத்தை தவறவிட்ட ஷெபாலி 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.


தொடர்ந்து களத்தில் இறங்கிய மரிசான் கேப், 17 பந்துகளில் 39 ரன்களும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15 பந்துகளில் 22 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு டெல்லி 223 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என கடின இலக்கை நோக்கி களம் இறங்கியது பெங்களூர்.


தடுமாற்றம்:


தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய போதிலும் நான்காவது ஓவரிலேயே விக்கெட்டை பறி கொடுத்தது பெங்களூர். சோபி டெவின், 14 ரன்களுக்கு வெளியேறினார். இருப்பினும், கேப்டன் மந்தனா மற்றும் எல்லிஸ் பெர்ரி அதிரடியாக ஆடினர். ஆனால், டெல்லி அணியின் சிறப்பான பந்து வீச்சால் இருவரும் தங்களின் விக்கெட்டுகளை பறி கொடுத்தனர்.


மந்தனா, 35 ரன்களிலும் பெர்ரி 31 ரன்களிலும் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். சீரான இடைவெளியில் பெங்களூர் அணியின் விக்கெட்டுகளை டெல்லி அணி பந்துவீச்சாளர்கள் எடுத்து அசத்தினார். குறிப்பாக, 5 விக்கெட்டுகளை எடுத்து தாரா நோரிஸ் மிரட்டினார்.


தாரா நோரிஸ் மிரட்டல்:


4 ஓவர்கள் வீசி, 29 ரன்களை விட்டு கொடுத்த 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் தாரா நோரிஸ். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு பெங்களூர் அணியால் 163 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 60 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.


இரண்டாவது போட்டி:


இதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் தொடங்கும் போட்டியில் உத்தரப்பிரதேசம் - குஜராத் அணிகள்  மோதுகின்றது.  


உத்தரப்பிரதேச அணியை பொறுத்தவரை கேப்டன் அலிசா ஹீலி, துணை கேப்டன் தீப்தி ஷர்மா, கிரேஸ் ஹாரி, சோபி எக்லெஸ்டன், ஷப்னிம் இஸ்மாயில், தாலியா மெக்ராத், ராஜேஸ்வரி கெய்க்வாட், உள்ளிட்டோர் சிறந்த பார்மில் உள்ளனர். 


அதேசமயம் குஜராத் அணியில் கேப்டன் பெத் மூனி, ஹர்லீங் தியோல், ஆஷ்லி கார்ட்னெர், சோபியா டங்லி, அனபெல் சதர்லேண்ட், சினே ராணா, ஹேமலதா என சிறந்த வீராங்கனைகள் இருப்பதால் இந்த போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம். இவ்விரு போட்டிகளும் ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகின்றது.