ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டி இன்று நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி சென்னைக்கு 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 


விராட் கோலி தலைக்கு வந்த பந்து:


முதலில் பேட் செய்த பெங்களூர் அணிக்கு விராட் கோலி - பில் சால்ட் ஆட்டத்தை தொடங்கினர். விராட் கோலி சற்று தடுமாற்றத்துடன் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினார். அப்போது, பதிரானா வீசிய 11வது ஓவரின் முதல் பந்தை அவர் பவுன்சராக வீசினார். அந்த பந்து விராட்கோலியின் ஹெல்மட்டை பதம் பார்த்தது. 


சிக்ஸருக்கு அனுப்பிய கோலி:


இதனால், மருத்துவ குழுவினர் உடனடியாக மைதானத்திற்குள் வந்து விராட் கோலியை பரிசோதித்தனர். அதன்பின்பு, மீண்டும் ஆட்டத்தை விராட் கோலி தொடர்ந்தார். அப்போது அடுத்த பந்தையும் பதிரானா பவுன்சராக வீசினார். ஆனால், இந்த முறை விராட் கோலி அந்த பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். மேலும், அதே ஓவரில் மற்றொரு பவுண்டரியையும் விளாசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






இந்த போட்டியில் விராட் கோலி 30 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்தார். தொடக்கம் முதலே விராட் கோலிக்கு இந்த போட்டியில் பந்து ஏதுவாக சிக்கவில்லை. இதனால், அவர் ரன் எடுக்கத் தடுமாறினார். பில் சால்ட்டிற்கும் சில பந்துகள் இதுபோல இருந்தாலும் அவர் பவுண்டரிகளை தொடர்ந்து விளாசினார். 


197 ரன்கள் டார்கெட்:


ரஜத் படிதாரின் அபார அரைசதம், தேவ்தத் படிக்கல்லின் அதிரடி, கடைசி கட்டத்தில் டிம் டேவிட்டின் ஹாட்ரிக் சிக்ஸர்களால் பெங்களூர் அணி 196 ரன்களை எட்டியது. பதிரானா இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 36 ரன்களை விட்டுக்கொடுத்தார்.